அனோஜன் விவகாரம் – நாளை நாடாளுமன்றில் சிறப்பு அறிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
இது குறித்து நாளை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவில் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ள அனோஜனின் விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை, இன்று காலை சிவராசா அனோஜனின் பெற்றோர் சந்தித்துள்ளனர்.
இதன்போது, அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காகச் சட்ட மற்றும் இராஜதந்திர ரீதியிலான அனைத்து முயற்சிகளையும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் அனோஜனின் பெற்றோர் இன்று காலை சந்தித்துள்ளனர்.
அவரும் அனோஜனின் விடுதலைக்கான அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

