புலம்பெயர் இலங்கையர்களின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்கும் இரட்டைக் குடியுரிமை
இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், பிள்ளைகள் மற்றும் மூன்றாம் தலைமுறை சந்ததியினருக்குக் கட்டணமின்றி இரட்டைக் குடியுரிமை வழங்க, 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
சிறிலங்காவுக்கும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை சமூகங்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்த முன்மொழிவை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
அவரது வரவுசெலவுத் திட்ட உரையின்படி, புலம்பெயர்ந்த இலங்கையர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு, “உலகளாவிய சிறிலங்கா பாரம்பரியக் குடிமகன்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இத்திட்டத்தின் கீழ், இரட்டைக் குடியுரிமை விண்ணப்பதாரர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பிள்ளைகள், அத்துடன் மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளும், அதற்கான கட்டணங்களைச் செலுத்தாமல் இரட்டைக் குடியுரிமை பெறத் தகுதி பெறுவார்கள்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரின் அறிவு, திறன்கள் மற்றும் ஆற்றல்களை நாட்டின் எதிர்கால அபிவிருத்தியுடன் இணைப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்று சிறிலங்கா அதிபர் கூறினார்.
மேலும், வெளிநாடுகளில் வாழும் சிறிலங்கா வம்சாவளியைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கும் அவர்களின் மூதாதையர் தாயகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதையும் இந்த முன்மொழிவு நோக்கமாகக் கொண்டுள்ளது.
