மேலும்

சிறிலங்காவின் இராணுவத் தலைவர்கள் பிற நாடுகளில் கைது செய்யப்படும் ஆபத்து

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நிறுவப்பட்டுள்ள புலனாய்வுப் பொறிமுறையினால், சிறிலங்காவின் இராணுவத் தலைவர்கள் உலகளாவிய அதிகார வரம்புக்கு அமைய  பல்வேறு நாடுகளின் நீதிமன்றங்களினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக   கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட  கூட்டு எதிர்க்கட்சியின்   ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நாவின் சிறப்பு புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் பல நாடுகளுக்குச் சென்று, கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்காவின் இராணுவத் தலைவர்களுக்கு எதிரான ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.

அவர்கள் தற்போது அந்த ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் 470 மூலங்களிலிருந்து 96,215 ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.

220 சாட்சியாளர்களும்,  250 நிறுவனங்களும் சாட்சியங்களை வழங்கியுள்ளன.

இந்த பின்னணியில், சிறிலங்கா இராணுவத் தலைவர்கள் விடுமுறைக்காகவோ, மருத்துவ தேவைகளுக்காகவோ, அல்லது தங்கள் குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் கவனிப்பதற்காகவோ வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போதெல்லாம், அவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

சம்பந்தப்பட்ட நாடுகள் உலகளாவிய அதிகார வரம்புக் கொள்கையைப் பயன்படுத்தும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *