மேலும்

சிறிலங்கா நல்லிணக்க, பொறுப்புக்கூறல் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்- ஐ.நா

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்துதலை முன்னெடுக்கவும் சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ரவீனா ஷம்தசானி இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,  கடந்த ஆண்டில், சிறிலங்கா தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகளையும் பொருளாதார அதிர்ச்சிகளையும் சந்தித்து வருவதாகவும், இது ஏழை மக்களை மிகவும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊழலைக் கையாளுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதும், அரசியல் படுகொலைகள், கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதும் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், நீண்டகாலமாகத் தொடரும் தண்டனையின்மைப் பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம், அடக்குமுறையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதால், தன்னிச்சையான கைதுகளும் குற்றச்சாட்டுகளின்றி நீண்டகாலத் தடுப்புக்காவல்களும் நிகழ்கின்றன.

சித்திரவதை, தடுப்புக்காவல் மரணங்கள், சிறைச்சாலைகளில் நெரிசல் மற்றும் வன்முறை ஆகியவை தொடர்கின்றன.

சிவில் சமூகப் பணியாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசால் கண்காணிக்கப்படுகின்றனர், அதேவேளையில் காணி மற்றும் சமயத் தலங்கள் மீதான பதற்றங்கள் தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கின்றன.

“சிறிலங்கா தனது நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அத்துடன் அதன் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளையும் சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்துவதாகவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக பேச்சாளர் ரவீனா ஷம்தசானி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *