சிறிலங்கா மீது சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்- சீன அமைச்சர் தெரிவிப்பு
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் நாட்டின் தெளிவான கொள்கைப்போக்கு என்பன, சீன முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக, சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து, கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
100க்கும் மேற்பட்ட சீன முதலீட்டாளர்களுடன் இணைந்து, தாம் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும், சீன அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சவாலான காலகட்டத்தில் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தகம் மற்றும் பொருளாதார இலக்குகளை அடைய- ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து இந்த சந்திப்பின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
உலகளாவிய பொருளாதார உறுதியற்ற சூழலில் சிறிலங்காவுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு, சீனா அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், சீன வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன பயணத்தின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளைத் தொடர்ந்து செயற்படுத்தும் நோக்கிலேயே, சீன வர்த்தக அமைச்சர் வாங் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சீன அரசாங்க ஆதரவுடன் நடந்து வரும் அபிவிருத்தித் திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பது மற்றும் முன்மொழியப்பட்ட புதிய முயற்சிகளை விரைவாக செயல்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
சீன தூதுக்குழுவில் சீன தூதுவர் கீ சென்ஹொங், ஆசிய விவகாரத் துறை பணிப்பாளர் நாயகம் வாங் லிப்பிங் மற்றும் வெளியுறவுத் துறை பணிப்பாளர் நாயகம் சூ ஜூட்டிங் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.