பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அழுத்தம் – சமாளிக்க சிறிலங்கா புதிய உத்தி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் சிறிலங்கா அரசாங்கம், உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
எதிர்ப்புகளை அடக்குவதற்கும், சிறுபான்மை சமூகங்களை குறிவைப்பதற்கும், பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்த, நீண்டகால கவலைகள் காரணமாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய சிறிலங்காவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் தனிநபர்களைத் தடுத்து வைக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளன.
இது தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைக்கு வழிவகுத்துள்ளது.
இத்தகைய நடைமுறைகள் சர்வதேச மனித உரிமைகள் தரங்களை மீறுவதாகவும், சிறிலங்காவின் சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் முன்னர் உறுதியளித்த போதிலும், அந்த திருத்தங்கள் சட்டத்தின் மிகவும் மோசமான விதிகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன.
இதனால் அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான முந்தைய அரசாங்கம் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்தது.எனினும், அதை முடிக்கவில்லை, இருப்பினும் சில திட்டங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தும் 240 அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் அமைப்புடன், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சந்திப்பை நடத்தியுள்ளார்.
இதன் போது அவர், புதிய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்து, பதிலீடாக ஒரு சட்டத்தை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
“புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்று அறிக்கையைத் தயாரித்து வருகிறோம்.
அதற்கான யோசனைகளையும் நாங்கள் பெற்று வருகிறோம்.
உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இனவெறி, மதம் அல்லது வேறு எந்தப் பிரச்சினையின் அடிப்படையிலும் ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்துவதற்காக வரைவு செய்யப்படவில்லை.
உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதில் இதுபோன்ற ஒரு சட்டமூலம் அவசியம்.
உலகின் பிற நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் உள்ளன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அந்த நாடுகளால் அந்த சட்டங்கள் வரைவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், அத்தகைய சட்டம் இருக்க வேண்டும்” என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, கூறியுள்ளார்.