மேலும்

பிரபாகரன்: ஆட்டிப் படைக்கும் ஆளுமை

prabahakaranவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று. இத்தகைய நிலையில், கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா உரையாற்றிய போது, வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தொட்டுச் சென்றிருந்தார். அவரது உரையின் முக்கியமான பகுதி அது.

“பிரபாகரனிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிரபாகரன் உருவாகியதால் தான், பீல்ட் மார்ஷல் ஒருவரும் உருவானார்” என்று அவர் கூறியிருந்தார்.

2011ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய, நோர்வேயின், இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜூம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சிறந்த போரியல் வல்லுனர் – இராணுவ மேதை என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆனாலும், பிரபாகரனின் அரசியல், இராஜதந்திர ஆளுமையை அவர்கள் அந்தளவுக்கு சிறப்பாக மதிப்பிட்டிருக்கவில்லை.

எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின், போரியல் ஆளுமை என்பது, எவராலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகவே- இருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒன்றும் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டுவதற்காக, நாடாளுமன்றத்தில் அந்தக் கருத்தைக் கூறியிருக்கவில்லை. அது பிரபாகரனின் போரியல் ஆளுமையை வெளிப்படுத்தும், அங்கீகரிக்கும் கருத்து என்பதில் சந்தேகமில்லை.

இன்று இலங்கையின் முப்படைகளும் அதிநவீன ஆயுதங்கள், போர்த்தளபாடங்களுடன் இருக்கின்றன என்றால், மூன்று இலட்சம் படையினரைக் கொண்டதாக விளங்குகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் பிரபாகரன் தான்.

அதனால் தான், பிரபாகரனிடம் தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

போர் தொடங்கிய போது, வெறும் 10 ஆயிரம் படையினரே இலங்கையில் இருந்தனர். அப்போது எந்த நவீன போர்த் தளபாடங்களும் படையினரிடம் கிடையாது. போருக்கான ஆயத்தநிலையும் இல்லை.

இருந்தாலும், மரபுசார் பயிற்சிகளைப் பெற்ற ஒரு இராணுவம் இருந்தது. அதனை எதிர்கொண்டு தான் பிரபாகரன் தனது போர் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

பிரபாகரன் எங்கும் போர்க்கலையைக் கற்கவில்லை எந்த நாட்டிடமும் பயிற்சிகளைப் பெறவில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே, பிரபாகரனிடம் தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அளவுக்கு அவரது போர் ஆளுமை அமைந்திருந்தது.

இலங்கை இராணுவம் இப்போது, உலகில் கவனிக்கத்தக்க ஒரு இராணுவமாக இருக்கிறது என்றால்-  இலங்கை இராணுவத்திடம் போர் அனுபவங்களையும் நுட்பங்களையும் கற்றுக்கொள்ள பல நாடுகள் முற்படுகிறது என்றால், அதற்கு ஒரே காரணம், பிரபாகரனின் போர் ஆளுமை மட்டும் தான்.

prabha - 2003

அந்த ஆளுமையைத் தோற்கடித்த ஒரே காரணத்தினால் தான், இலங்கை இராணுவத்துக்கு இந்த மவுசும் மதிப்பும் கிடைத்தது.

வெளியுலக ஆதரவு இல்லாமல் ஒரு படைக்கட்டமைப்பை உருவாக்கி, சர்வதேசத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அதனைக் கட்டியெழுப்பியிருந்தார் பிரபாகரன்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படையினர் தான் இருந்தனர். இப்போதுள்ள 3 இலட்சம் படையினர் இருந்திருந்தால், இரண்ட ஆண்டுகளில் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருப்போம் என்று கூறியிருக்கிறார்.

இலங்கை இராணுவத்துடன் போரைத் தொடங்கிய போது, விடுதலைப் புலிகளும் ஒன்றும் ஆயிரக்கணக்கான போராளிகளையோ, மிகப்பெரிய ஆயுத தளபாடங்களையோ, நவீன போர்க்கருவிகளையோ, சண்டைப்படகுகள், விமானங்களையோ கொண்டிருக்கவில்லை.

ஐந்து பத்து பேரில் இருந்து தான், இராணுவத்துக்கு எதிரான போர் புலிகளால் தொடங்கப்பட்டது. குறைந்தளவு போராளிகளே இருந்தாலும், இராணுவத்தின் செறிவு குறைவாக இருந்தமை, புலிகளுக்குச் சாதகமாக இருந்திருக்கலாம்.

அதனால் தான், இப்போதுள்ள படைபலம் இருந்திருந்தால் இரண்டு ஆண்டுகளில் போரை முடித்திருக்கலாம் என்று சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

எனினும், படைபலம் மாத்திரமே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகொள்வதற்கு சாதகமான அம்சமாக இருந்தது என்ற கருத்து ஏற்புடையதல்ல. மூன்றாவது கட்ட ஈழப்போரில் கூட, இரண்டு இலட்சம் படையினருடன் தான் அரசாங்கம் இருந்தது.

ஆனாலும் புலிகளை அப்போது தோற்கடிப்பதற்கான சூழலும், உத்திகளும் வாய்க்கவில்லை.

பிரபாகரனிடம் இருந்து போரிடும் முறைகளை மாத்திரம் இராணுவம் கற்றுக் கொள்ளவில்லை. பல ஆயுதங்களின் அறிமுகமும்  கூட இராணுவத்துக்கு புலிகளால் தான் கிடைத்திருந்தது.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி, அச்சுவேலியில் புலிகளின் முகாம் ஒன்றை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். அது ஒரு ஆயுத களஞ்சியமாகவும் விளங்கியது. அங்கிருந்து தான், ஆர்பிஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்முதலாக இராணுவத்தின் கையில் கிடைத்தது.

அதற்குப் பின்னர் அதே ஆர்பிஜிகளை பெருமளவில் இராணுவம் வாங்கிக் குவித்தது. அதுபோலப் பல ஆயுத தளபாடங்களை விடுதலைப் புலிகள் போரில் அறிமுகப்படுத்திய பின்னரே, இராணுவத்தினர் அதனை வாங்க முயன்றனர்.

சாம் எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தான் விமானப்படை வாங்கியது. பல்குழல் பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள் தான் முதன் முதலில் இலங்கையில் பயன்படுத்தத் தொடங்கினர்.

1999ஆம் ஆண்டு தொடக்கத்தில் தள்ளாடி படைத்தளம் மீதான தாக்குதலில் புலிகள் 12 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கியை பயன்படுத்தியிருந்தனர்.

2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் புலிகளை நுழைந்த போது தான் இராணுவம் பல்குழல் பீரங்கிகளை வாங்கியது.

இப்படி போரில் பல ஆயுதங்களை இராணுவத்துக்கு அறிமுகப்படுத்தியவரே பிரபாகரன் தான்.

prabakaran

ஆயுத தளபாடங்களை மாத்திரமன்றி, பல போர் உத்திகளையும் பிரபாகரனிடம் இருந்தே, இலங்கை இராணுவம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த- நான்காவது கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவம் பயன்படுத்திய பெரும்பாலான உத்திகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து கற்றுக் கொண்டவை தான்.

பின்தளப் பகுதி வரை ஊடுருவிச் சென்று நிலையெடுத்த பின்னர் தாக்குதல்களைத் தொடுப்பது, சிறிய கெரில்லா அணிகளாக இராணுவத்தைப் பிரித்து சண்டையில் ஈடுபடுத்தியது என்பன அதில் முக்கியமானது.

பரந்துபட்ட பிரதேசத்தில் கிட்டத்தட்ட கெரில்லா பாணியிலான  ஒரு அரங்கையும், மரபுவழியிலான ஒரு அரங்கையும் சமநேரத்தில் திறந்து விட்டிருந்தது இராணுவம். பிரபாகரனின் கெரில்லா போர் உத்திகளையே இங்கு இராணுவம் பயன்படுத்தியது.

அதனை எதிர்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் சிரமப்பட்டார்கள். அது தனியே போர் உத்தியுடன் தொடர்புடைய பிரச்சினையாக மாத்திரம் இருக்கவில்லை.

இராணுவத்திடம் கிடைத்திருந்த நவீன கண்காணிப்பு வசதிகள், ஆயுத விநியோகங்கள் முடக்கப்பட்டமை, மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி, இராணுவத்தின் ஆட்பலப் பெருக்கம் போன்ற, இராணுவத்தின் உத்திக்கு எதிரான வியூகங்களை வகுப்பதற்குப் புலிகளுக்குப் போதிய அவகாசத்தைக் கொடுத்திருக்கவில்லை.

அது புலிகளின் தோல்விக்குக் காரணமாகியது.

எவ்வாறாயினும், போர் முடிந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பிரபாகரனிடம் தான் போரைக் கற்றுக்கொண்டோம் என்ற உண்மையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பிரபாகரன் என்ற இராணுவ ஆளுமை இல்லாமல் போயிருந்தால் இலங்கை வரலாற்றில் ஒரு பீல்ட் மார்ஷலோ, சரத் பொன்சேகா போன்ற பல நட்சத்திர நிலைத் தளபதிகளோ உருவாகியிருக்க முடியாது.

குறைந்த ஆளணிப் பலத்தையும், மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத பலத்தையும் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் இராணுவத்துக்கே, போரைக் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு பிரபாகரன் இராணுவ மேதையாக விளங்கியிருந்தார்.

இராணுவத்திடம் இருந்தே போர் நுணுக்கங்களைப் பெற்றுக் கொண்டு, அதற்கு எதிரான வியூகங்களை அவர் வகுத்தார். இராணுவத்தின் போர் நுட்பங்களையும், மூலோபாயத் திட்டங்களையும் முன்னுணர்ந்து செயற்படக் கூடிய ஆற்றல் பிரபாகரனுக்கு இருந்தது.

அதுவே, போரின் கடைசி நாள் வரை பிரபாகரனுக்காக மூன்று இலட்சம் படையினரும், அரசியல், இராணுவத் தலைமைகளும் தலையைப் பிய்த்துக் கொண்டு அலையும் நிலையை ஏற்படுத்தியது.

இப்போது புலிகளும் இல்லை, பிரபாகரனும் இல்லை. இந்தநிலையில் தான், சரத் பொன்சேகா பிரபாகரன் இல்லாத நிலையின் பாதகத்தை உணரத் தொடங்கியிருக்கிறார் போலுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான ஒரு மூலோபாயத் திட்டம் இதுவரை இல்லை என்று அவர் புலம்பத் தொடங்கியிருக்கிறார்.

பிரபாகரன் என்ற ஒரு மையத்தைச் சுற்றியே ஓடிப் பழகி விட்ட இலங்கைப் படையினர், அந்த மையம் வெறிதானவுடன், பலமிழக்கத் தொடங்கி விட்டது என்பதையே சரத் பொன்சேகாவின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.

இந்தநிலையில் இருந்து மீள்வதற்கே, அவர் தேசிய பாதுகாப்புக்கான மூலோபாயத் திட்டம் பற்றிப் பேசத்தொடங்கியிருக்கிறார். அதற்காகத் தான் அவர் பிரபாகரனை நினைவுபடுத்தியிருக்கிறார்.

ஆக, பிரபாகரனை வைத்துத் தான் எதையும் செய்யக் கூடிய நிலையில் இன்றைக்கும் இலங்கைப் படைக் கட்டமைப்பு இருக்கிறது என்பதே உண்மை.

– சுபத்ரா

வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

ஒரு கருத்து “பிரபாகரன்: ஆட்டிப் படைக்கும் ஆளுமை”

  1. mano says:

    “ஆனாலும், பிரபாகரனின் அரசியல், இராஜ தந்திர ஆளுமையை அவர்கள் அந்தளவுக்கு சிறப்பாக மதிப்பிட்டிருக்கவில்லை.” அதற்கான காரணம் இவர்கள் யாலும் அது பற்றித் தெரிந்திருக்கவில்லை என்பதாலோ மதிப்பிடத் தெரியவில்லை என்பதாலோ என எவரும் கருதி விடக் கூடாது. புலிகளின் அரசியல் மாற்று யோசனை பற்றிக் கருத்து வெளியிட்ட ஆமிட்ரேஜ் புலிகள் தன்னாதிக்க உரிமை டஎன்ற கதவு இடுக்கைப் பயன்படுத்தி தனி நாட்டுக் கோரிக்கையை வலுப்படுத்த இடமளிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார். புல்களின் இரரஜ தந்திரம் பற்றிய பயம் கரணமாகவே பயங்கரவாத அமைப்புகளில் வைத்த படியே நியூ யோர்க் கூட்டத்தில் புலிகளை பங்கு பற்றும் கௌரவப் பிரச்சனையால் புலிகளை பேச்சுகளில் கதவடைப்பை ஏற்படுத்தி அமைதிப் பேச்சை முறித்தது அமெரிக்க மற்றும் இந்திய பிரித்தானிய அரசுகள். புலிகளின் ஆட்சி உருவானால் இன்று திருக்கோணமலை துறை முகமும் காங்கேசன் துறை துறை முகமும் அமெரிக்க இந்திய அரசுகளிடம் போயிருக்காது. இத்தகைய வசதிகளுக்காகவே புலிகள் பயங்கரவாதிகளாகவும் அவர்களை அழித்தொழிக்கும் திட்டமும் நிறைவேற்றப் பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *