மேலும்

மாவீரர் நாளுக்காக மீளுயிர் பெறும் துயிலுமில்லங்கள்

maveerar (1)தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், இம்முறை தாயகத்தில் உள்ள பெரும்பாலான துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தும் சூழல் அமைந்துள்ளது.

போருக்குப் பின்னர், சிறிலங்கா படைகளால் அழிக்கப்பட்ட துயிலுமில்லங்கள், நினைவிடங்கள், துப்பரவு செய்யப்பட்டு, மாவீரர் நாள் நினைவுகூரலுக்காக தயாராகி வருகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில், தீவகம்,சாட் மற்றும் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லங்கள் மாத்திரம், இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டுள்ளன.

இந்த துயிலுமில்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு, எஞ்சியிருக்கும் நடுகற்களைக் கொண்டு நினைவுச்சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த துயிலுமில்லங்களில் நாளை மாலை மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

maveerar (1)maveerar (2)maveerar (3)maveerar (4)

அதேவேளை, கோப்பாய், கொடிகாமம், எள்ளங்குளம் துயிலுமில்லங்கள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதால், அவற்றுக்கு அருகில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தவிர,  பன்னிரு வேங்கைகள் மற்றும் கேணல் கிட்டு ஆகியோரின் நினைவுச்சின்னங்கள் அமைந்திருந்த வல்வெட்டித்துறை தீருவில் திடலிலும் மாவீரர்களை நினைவுகூரு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. இங்கு எஞ்சியிருந்த நடுகற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  விசுவமடு- தேராவில் துயிலுமில்லம், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், அதனருகில் உள்ள ஒரு பகுதியில் மாவீரர்களை நினைவுகூர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முள்ளியவளை, துயிலுமில்லத்திலும், அவ்வாறே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில், துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இரணைப்பாலை துயிலுமில்லத்திலும், நினைவுகூரல் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

மன்னார் மாவட்டத்தில், பெரியபண்டிவிரிச்சான், ஆட்காட்டிவெளி துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில், ஈச்சங்குளம் துயிலுமில்லப் பகுதியிலும் நினைவுகூரல் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் – ஆலங்குளம் துயிலுமில்லம் துப்புரவு செய்யப்பட்டு நினைவுகூரலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் தரவை, மாவடிமுன்மாரி துயிலுமில்லங்களிலும், அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் மாவீரர் நாளை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாளை மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *