மேலும்

பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளே நெருக்கடிக்குக் காரணம் – விசாரணை அறிக்கையில் தகவல்

petrol punksசிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு, பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளே காரணம் என்று, மூன்று அமைச்சர்களைக் கொண்ட விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, சரத் அமுனுகம,  அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா அதிபர் நியமித்திருந்தார்.

இந்தக் குழு தமது அறிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கையளித்துள்ளது.

இந்த அறிக்கையிலேயே, பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு, வழக்கமாகப் பேணப்படும் எரிபொருள் கையிருப்பை பேணவில்லை என்றும், நெருக்கடி ஏற்படப் போவதை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ‘சராசரி நாள் ஒன்றில், சிறிலங்காவில் 120,000 மெட்றிக் தொன் எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்கும் வசதிகள் உள்ள போதிலும், நாளொன்றுக்கு சராசரியாக 2000 மெட்றிக் தொன் எரிபொருளே தேவைப்படுகிறது.

நெருக்கடி வரவுள்ளதை யாரும் உயர்மட்டத்துக்கு தெரியப்படுத்தவில்லை. நெருக்கடி ஏற்படப் போவது, ஒக்ரோபர் 17ஆம் நாளே பலர் அறிந்திருந்தனர். எனினும், அதனை எவரும் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தவில்லை.

இது ஒரு சதித் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை நிராகரிப்பதற்கில்லை.

இந்த நெருக்கடிக்குக் காரணமான குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நான் 100 நாள் திட்டத்தில், அமைச்சராக இருந்த போது, எமது எரிபொருள் கையிருப்பு அளவை 60ஆயிரம் மெட்றிக் தொன்னில் இருந்து 90 ஆயிரம் மெட்றிக் தொன்னாக அதிகரிக்கப்பட்டது.

லங்கா இந்தியன் ஓயில் நிறுவனம், 15 ஆயிரம் தொன் எரிபொருளை சேமிக்கும் வசதி கொண்டது. மேலதிகமாக 8000 மெட்றிக் தொன் எரிபொருளை சேமிக்கும் வசதிகளும் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *