மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை டிசெம்பர் 8ஆம் நாள் பொறுப்பேற்கிறது சீன நிறுவனம்

Hambantota harborசீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங் நிறுவனமும், சிறிலங்கா துறைமுக அதிகாரசபையும் இணைந்து உருவாக்கிய கூட்டு முயற்சி நிறுவனம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை வரும் டிசெம்பர் 8ஆம் நாள் தொடக்கம் இயக்கவுள்ளது.

கொழும்பில் நேற்று வர்த்தகப் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பில், அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்த தகவலை வெளியிட்டார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை பொறுப்பேற்கும் போது, 430 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக்கொள்ளப்படும்.  எஞ்சிய கொடுப்பனவு,  ஆறு மாதங்கள் கழித்து செலுத்தப்படும்.

கடந்த ஜூலை மாதம், சிறிலங்கா அரசாங்கம் சீன நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, 1.1 பில்லியன் டொலருக்கு, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 வீத பங்குகள் குத்தகைக்கு விடப்படவுள்ளன.

இதற்கமைய அம்பாந்தோட்டையில் சீனாவின் 5 பில்லியன் டொலர் முதலீட்டில், கைத்தொழில் வலயம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

இங்கு கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கு பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

3 பில்லியன் டொலரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், 125 மில்லியன் டொலரில் சீமெந்து ஆலை என்பனவற்றை உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து கூட்டு முயற்சியாக தொடங்குவதற்கான திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கைத்தொழில் வலயத்துக்கான காணிகள் பெரும்பாலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கான உடன்பாடு குறித்து சீனத் தரப்புடன் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் பேச்சுக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைத்தொழில் வலயத்திலும் கூட 70 வீதம் சீனாவின் பங்கு இருக்கும்.

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு, ஜனவரி மாதம் தயாராகும் என்று நம்புகிறோம். இந்தியா, சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடுகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில், சாத்தியமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *