மேலும்

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 255 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி  மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8-ஆம் நாளான நேற்று, குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தங்கம் எனச் சந்தேகிக்கப்படும் ஆபரணம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய  அகழ்வின் போது 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகளிலிருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் மற்றுமொரு எலும்புக்கூடு என இரண்டு தொகுதிகள் நேற்று  மீட்கப்பட்டன.

இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தம் 255 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 249 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணியின் போது புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய கருப்பு நிற மண்ணிலிருந்து, எரிந்த நிலையிலான சில எலும்புத் துண்டுகளும் நாணயக் குற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், உடைந்த நிலையிலான மூக்குத்தி போன்ற சிறிய தங்க ஆபரணம், ஆணிகள், மரப்பெட்டியின் சிதைவுகள் மற்றும் சில நாணயக் குற்றிகளும் சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

குழந்தையின் எலும்புக்கூடு மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால், அதனை நேரடியாக மண்ணிலிருந்து பிரித்தெடுக்க முடியவில்லை.

இதனால், பாதுகாப்பு கருதி எலும்புக்கூட்டைச் சுற்றி துணிகளால் கட்டப்பட்டு, மண்ணுடன் சேர்த்து பக்குவமாக அகழ்ந்தெடுக்கப்பட்டதாக சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்தார்.

படம்- பிரபாகரன் டிலக்சன் (முகநூல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *