மேலும்

முறைகேடாக கடற்படையில் இணைந்த யோசித ராஜபக்ச – நாடாளுமன்றில் அறிக்கை

Shirathi and Yoshithaசிறிலங்கா அதிபர் செயலகத்தின் அறிவுரையின் பேரில், லெப்.யோசித ராஜபக்ச மீது, சிறிலங்கா கடற்படை நடவடிக்கையை எடுக்கும் என்று சிறிலங்கா அரசின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜேவிபி உறுப்பினர் எழுப்பியிருந்த கேள்விக்குப் பாதுகாப்பு அமைச்சின் பதிலை அமைச்சர் கயந்த கருணாதிலக, நேற்று வெளியிட்டார்.

“யோசித ராஜபக்ச 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் நாள், சிறிலங்கா கடற்படையின் கடெற் அதிகாரியாக இணைந்து கொண்டார்.

எனினும் அவர் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்வதற்கான கல்வித்தகைமையைக் கொண்டிருக்கவில்லை.

2006 ஆம் ஆண்டு மேற்படி பதவி நிலைக்கு கோரப்பட்டிருந்த கல்வித் தகைமைகளின் படி கபொத  சாதாரண தரத்தில் ஒரே அமர்வில் ஆங்கிலம், சிங்களம், கணிதம், விஞ்ஞானம் அல்லது தமிழ் (மாற்றுப் பாடங்கள் அல்லது) உட்பட ஆறு பாடங்களில் திறமை சித்தியும், உயர்தரத்தில் வர்த்தகம் அல்லது விஞ்ஞானப் பிரிவில் ஏதேனும் ஒன்றில் இரு பாடங்களில் சித்தி என்பனவே தகைமைகளாகக் கோரப்பட்டிருந்தன.

எனினும் இப் பதவியில் இணைத்துக் கொள்ளப்பட்டவரான யோசித ராஜபக்ச 2003 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் 6 திறமை சித்திகளுடன், 8 பாடங்களில் சித்தியடைந்திருந்த அதேவேளை சிங்கள பாடத்தில் அவர் சாதாரண சித்தியையே பெற்றிருந்தார்.

2004 ஆம் ஆண்டு இரண்டாவது அமர்விலேயே அவர் ஆங்கிலப் பாடத்தில் அதி திறமைச் சித்தியையும், சிங்கள பாடத்தில் திறமைச் சித்தியையும் பெற்றுள்ளார்.

மேற்படி ஆட்சேர்ப்புக்கு தேவையான ஒரே அமர்வில் என்ற ரீதியிலான தகைமையின் பிரகாரம் அவர் சிங்கள பாடத்தில் திறமைச் சித்தி பெற்றிருக்கவில்லை.

அத்துடன் அவர் உயர்தர கலைப் பிரிவிலேயே இரு பாடங்களில் திறமைச் சித்தியைப் பெற்றுள்ளார்.

எனினும் 2006 டிசம்பர் 14 ஆம் நாள் யோசித ராஜபக்ச கடற்படையின் கடெற் பிரிவுக்கு உள்வாங்கப்பட்டு 2008 டிசம்பர் 14 ஆம் நாள் வரை அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.

2006 காலப்பகுதியில் யோசித ராஜபக்சவின் தந்தையார் மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராக இருந்தால், போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இளைஞர்களை படைகளில் இணைப்பதை ஊக்குவிக்கும் வகையில் யோசித ராஜபக்ச மேற்படி பதவிக்கு இணைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சு இதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.

2007 ஜனவரி 1ஆம் நாள் முதல் 2010 ஒக்டோபர் 31 ஆம் நாள் வரையில் நான்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் கற்கைநெறிகளுக்காக சென்ற யோசித ராஜபக்சவுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் இரண்டு 22 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

எனினும் போர் இடம்பெற்றபோது ஐந்து மாதங்களே அவர் நாட்டில் இருந்தார். 2008 டிசம்பர் 14 இல் அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்ட யோசித ராஜபக்ச,  2009 ஓகஸ்ட் மாதம் 29 ஆம் நாள் பயிற்சிக்காக உக்ரேனுக்கு செல்லும் வரையான காலப்பகுதியிலேயே அவர் சிறிலங்காவில் இருந்துள்ளார்.

வெளிநாட்டுப் பயிற்சிகள் அனைத்துக்கும் சிறிலங்கா அரசாங்கமே செலவிட்டுள்ளது.

யோசித ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை அதிபர் செயலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அதிபர் செயலகத்தின் பரிந்துரையின் பேரில், சிறிலங்கா கடற்படை ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *