மேலும்

உரை பிறழ்வு நேர்ந்தமைக்கு  வருந்துவதாக திருமாவளவன் அறிக்கை

எனது ஆருயிர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களைப்பற்றி வேறு பொருள் கொள்ளும் வகையில் ‘உரை பிறழ்வு’ நேர்ந்தமைக்கு  மிகவும் வருந்துவதாக  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் சென்னை தியாகராய நகரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போது, அண்ணன் பிரபாகரன், பெரியாருக்கு எதிரானவர் இல்லையென்றும்;  பெரியாரைப் போலவே சாதியச் சமூகக் கட்டமைப்புக்கு எதிரானவர் என்றும் விவரித்துப் பேசுவதே எனது முனைப்பாக  இருந்தது.

அதனையொட்டி அண்ணனின் சாதிமறுப்புத் திருமணம் பற்றியும், சாதிய சிக்கல்கள் தொடர்பாக இயக்கத்தின் சார்பில் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பேசினேன்.

ஆனால், அண்ணன் பிரபாகரன் அவர்கள் ‘சாதியத்தை எதிர்த்தார்’ என்பதற்கு மாறாக, ‘காதலுக்காகத் தண்டனை வழங்கினார்’ என பொருள்படும்படி எனது உரை அமைந்தது ஒரு பிறழ்வே தவிர வேறேதும் இல்லை.

தேசியத் தலைவரின்  மகத்தான ஈகத்துக்கும் மாபெரும் வீரத்துக்கும் ஊறு விளைவிக்கும் நோக்கில் ஒருபோதும் நான் சிந்தித்ததுமில்லை; பேசியதுமில்லை.

எனது ஆருயிர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி வேறு பொருள் கொள்ளும் வகையில் ‘உரை பிறழ்வு’ நேர்ந்தமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்றும் திருமாவளவன் வெளியிட்டுள்ள  அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *