மேலும்

புதிய போர்க்கப்பல்களை வாங்குகிறது சிறிலங்கா கடற்படை

india-sl-naval-ex (1)சிறிலங்கா கடற்படையில் அடுத்த ஆண்டு இரண்டு புதிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இணைத்துக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

“போருக்குப் பிந்திய கடல்சார்  செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், இரண்டு புத்தம்புதிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இந்தப் போர்க்கப்பல்களின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு கப்பல் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது கப்பல் அடுத்த ஆண்டு இறுதியில் கிடைக்கும்.

சிறிலங்கா கடற்படையிடம் தற்போது, சயுர, சமுத்ர, சாகர என மூன்று போர்க்கப்பல்கள் மாத்திரம் உள்ளன.

கடந்த காலங்களில் தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக நாம் சிறிய போர்க்கப்பல்கள் மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகளில் மாத்திரம் கவனம் செலுத்தினோம்.

சிறிலங்கா கடற்படையைத் தரமுயர்த்தும், “சிறிலங்கா கடற்படை 2020-25″ திட்டத்தின் கீழ், சிறிலங்கா கடற்படை கோவாவில் தற்போது கட்டப்படும் இரண்டு போர்க்கப்பல்கள் உள்ளிட்டதாக, மேலும் 10 புதிய போர்க்கப்பல்கள் சேர்த்துக் கொள்ளப்படும்.

சிறிலங்காவுக்கு வரும், ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா போன்ற வெளிநாட்டுப் போர்க்கப்பல்களால், சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

விக்கிரமாதித்யா போன்ற பாரிய போர்க்கப்பல்கள், கடந்த காலங்களில் கொழும்புத் துறைமுகத்துக்குப் பயணிக்க முடியாத நிலை காணப்பட்டது.

கொழும்பு தெற்கு இறங்குதுறை 18 மீற்றர் ஆழத்தில் விரிவாக்கப்பட்டுள்ளதால், பாரிய போர்க்கப்பல்கள் தரித்து நிற்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டு ஜுலை மாதத்துக்குப் பின்னர், ரஷ்யா, ஜப்பான், அவுஸ்ரேலியா, பங்களாதேஸ், ஓமான், கட்டார், பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் 25 போர்க்கப்பல்கள் சிறிலங்கா வந்துள்ளன.

மேலும், அடுத்த சில மாதங்களில், பிரித்தானியா, தென்னாபிரிக்கா, ஓமான், மலேசியா, நைஜீரியா, ஆகிய நாடுகளின் ஆறு போர்க்கப்பல்கள் கொழும்பு வரவுள்ளன.

ஒவ்வொரு நாடும், தமது போர்க்கப்பல்களை அனுப்பும் போது, அதற்குத் தேவையான பாதுகாப்பை, அந்த நாடு வழங்குமா என்பதைப் பார்த்த பிறகே அனுப்புகின்றன.

அந்த வகையில், சிறிலங்கா கடற்படை மீது, அனைத்துலக நாடுகள் மத்தியில், சிறந்த மரியாதை உள்ளது. அதனையிட்டு நாம், பெருமைப்பட வேண்டும்.

கடற்படைப் பயிற்சி நிலையமொன்றை, சிறிலங்காவில் நிறுவுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

எனினும், சிறிலங்கா – இந்தியாவுக்கு இடையிலான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே, அது பற்றிச் சிந்திக்க முடியும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *