வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்
தற்போதைய ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை, சிறிலங்கா சரியான நேரத்தில் நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய- சிறிலங்கா கூட்டு ஆணையத்தின் 27வது அமர்வு பெப்ரவரி 12 ஆம் நாள், கொழும்பில் இடம்பெற்ற போதே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அமர்வில், இரு தரப்பினரும் பாதுகாப்புத் துறையில், குறிப்பாக இந்தோ-பசுபிக் பகுதியில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.
விதிகள் சார்ந்த அனைத்துலக ஒழுங்கு, பயனுள்ள பன்முகத்தன்மை மற்றும் அனைத்துலக சட்டத்தின் கொள்கைகள் மற்றும் ஐ.நா. சாசனத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தங்கள் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை இரு தரப்பினரும் எடுத்துரைத்துடன், ஐ.நா கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின் (UNCLOS) முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் குறித்து சிறிலங்காவுக்கு விளக்கமளித்துள்ளது.
தற்போதைய சுழற்சி முடிந்ததும், மீண்டும் விண்ணப்பிக்கும் நோக்கத்தை சிறிலங்கா வெளிப்படுத்தியுள்ளத.
அதேவேளை, தற்போதைய ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் கட்டமைப்பின் கீழ் 27 முக்கிய உறுதிமொழிகளை செயல்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை சிறிலங்கா மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், அதன் முன்னேற்றம் குறித்த வழக்கமான புதுப்பிப்புகளை வழங்கவும் ஒப்புக்கொண்டது.
உலகளாவிய நுழைவாயில் மூலோபாயத்தின் கீழ் மேலும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படுவது, இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது, சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கருத்து மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரங்கள் உள்ளிட்ட சிறிலங்காவின் அண்மைய ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பாகவும் கூட்டு ஆணைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
சுயாதீன தேசிய நிறுவனங்கள், குறிப்பாக காணாமல் போனோருக்கான பணியகம் , இழப்பீட்டுக்கான பணியகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான பணியகம் மூலம் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சிறிலங்கா விளக்கமளித்துள்ளது.
சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கவும் அகற்றவும் மற்றும் மீன்வளத் துறையில் உறுதிமொழிகளை மதிக்கவும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
அடுத்த கூட்டு ஆணையக் கூட்டம் 2027 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் என்றும் இணங்கப்பட்டுள்ளது.
இந்த அமர்விற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜாவும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையில் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான செயல் நிர்வாக இயக்குநர் பாவோலா பம்பலோனியும் தலைமை தாங்கினர்.

