இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக பேண சிறிலங்கா வலியுறுத்தல்
மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடலை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான ஒரு வலயமாக பேணுவதன் முக்கியத்துவத்தை சிறிலங்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மொஸ்கோவில் நடைபெற்ற, பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளின் 14வது அனைத்துலக கூட்டத்தில் உரையாற்றிய, சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த இதனைத் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடலின் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
மேலும், பிராந்திய பதற்றங்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக, கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை நிலைநிறுத்துதல், சர்வதேச சட்டத்தை மதித்தல் மற்றும் நாடுகளிடையே ஆக்கபூர்வமான உரையாடலை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதம், இணையக் குற்றங்கள், கடல்சார் பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை தொடர்பான அபாயங்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அனைத்துலக ஒத்துழைப்பு, உளவுத் தகவல்களைப் பகிர்தல் மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு கவலைகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பல நாடுகளின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

