மேலும்

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் அரசிதழ் மீண்டும் வெளியீடு

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28ஆம் நாளிடப்பட்டு, இந்த அரசிதழ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுப் பாதுகாப்பு, மக்களின் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதற்கும், அதேவேளை ஒட்டுமொத்த பொதுமக்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கு அத்தியாவசியமாக விளங்கும் விநியோகங்கள் மற்றும் சேவைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் ஏதுவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் செயலாளர் இந்த அரசிதழ் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் சிறிலங்காவில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி பேரிடரைத் தொடர்ந்து, பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும், சிறப்பு அரசிதழ் அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க பொது மக்கள் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த அரசிதழ் அறிவிப்பு வௌியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *