ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டோம் – சம்பந்தன்
ஒருபோதும் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று காலை 10.30 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றிருந்தது.
இந்தக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய இரா.சம்பந்தன்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் சில முரண்பாடுகள் காணப்படுகின்றமையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஜனநாயக கட்டமைப்பொன்றில் அவ்வாறான முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதனை பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை.
எமது மக்கள் நீண்டகாலமாக பிரச்சினைக்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட அவர்களுக்கு பரிகாரம் வழங்கப்படவேண்டும். அதேநேரம் எமது மக்கள் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழுவதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும்.
அவ்வாறானதொரு சூழல் உருவாக்கப்படுவதாயின் இங்கு புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிடித்து நிலைத்திருக்ககூடிய நிரந்தரமான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வுவழங்கப்படவேண்டும் என்பதை நாம் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனான ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் வலியுறுத்தி வருகிறோம். அதில் உறுதியுடனும் இருக்கிறோம்.
நான் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள். கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அவை நிராகரிக்கப்படவேண்டியவை. நான் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.
எமது மக்கள் தமது பூர்வீக மண்ணில் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும். அவர்களின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்பட்டதாக அமையவேண்டும். வடக்கு கிழக்கு எமது மக்களின் பூர்வீக தாயகமாகும். தற்போது உயர்நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படவேண்டும். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் அதியுச்ச சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
எமது மக்கள் எமக்கு ஆணை வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ளாத எதனையும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்களின் அனுமதியுடனேயே நாம் எவ்விதமான விடயங்களையும் ஏற்றுக்கொள்வோம். தற்போதைய சூழலில் எமது பிரச்சினை அனைத்துலக ரீதியில் முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் கடந்த காலத்தில் ஒரு சர்வாதிகார போக்குடைய ஆட்சி முன்னெடுக்கப்பட்டிருந்து. எமது மக்களின் பங்களிப்புடன் ஜனவரி எட்டாம் நாள் புதிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மைத்திரிபால சிறிசேன அதிபராக இருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக காணப்படுகிறார். தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் கூட்டாக இணைந்து ஆட்சியை முன்னெடுக்கின்றன. தேசிய அரசாங்கமொன்ற உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள புதிய சூழலில் நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படுவது அவசியமானதாகும். அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதும் முக்கியமானதாகும். அவ்வாறில்லாதுவிடின் அந்த ஆட்சியை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்லமுடியாது.
இவ்வாறான சூழலில் புதிய அரசாங்கம் சில முற்போக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள், பொதுமக்களின் அன்றாடப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல், பொறுப்புக்கூறுதல் போன்ற விடயங்களில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை அவதானிக்க கூடியதாகவிருக்கிறது.
தென்னிலங்கையில் புதிய அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நாம் ஒருபோதும் நழுவ விடக்கூடாது.
நாம் முஸ்லிம் மக்களை அரவணைக்கவேண்டும். அவர்களுடன் இணைந்தே தீர்வு தொடர்பான இறுதி முடிவை எட்டவேண்டும்.
அதேநேரம் சிங்கள மக்களையும் பகைக்கக் கூடாது. அவர்கள் அச்சமடையும் வகையிலான காரசாரமான கருத்துக்களை முன்வைக்க கூடாது. அனைவரும் இத்தருணத்தில் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
எமது மக்களின் துன்ப துயரங்கள் நீங்கிய புதிய எதிர்காலத்திற்கான ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்” என்று குறிப்பிட்டார்.