மேலும்

வேலைவாய்ப்பின்றி இருக்கும் முன்னாள் போராளிகள் – அமந்த பெரேரா

Sivalingam Ruvendradassசிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகிய போதிலும், பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போதும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கின்றனர்.

இவர்கள் வாழும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவர்கள் தமக்கான தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னாள் தமிழ்ப் புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி மற்றும் தொழிற் பயிற்சிகள் தொடர்பான கட்டாய ‘புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில்’ சிவலிங்கம் ருவேந்திரதாசும் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் பெற்றிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் அவர் தனது பொருளாதார நெருக்கடியால் துன்பப்படுகிறார்.

‘போர் இடம்பெற்ற போது நான் எனக்குத் தேவையான பொருட்களை புலிகளிடமிருந்தாவது பெற்றுக் கொள்ள முடிந்தது’ என சிவலிங்கம் ருவேந்திரதாஸ் தெரிவித்துள்ளார்.

இவர் தச்சுத் தொழிலுக்கான பயிற்சியைப் பெற்றிருந்தாலும் கூட, ருவேந்திரதாஸ் தனது சொந்த இடமான வள்ளிபுனம் கிராமத்திற்குத் திரும்பிய போது தச்சுத் தொழிலைச் செய்வது என்பது சாத்தியமற்றதாக இருந்தது. வள்ளிபுனமானது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட கிராமமாகும்.

‘தற்போது வள்ளிபுனத்தினத்தில் நெடுஞ்சாலைகள், புதிய தொடருந்துப் பாதைகள், புதிய மின்சார இணைப்புக்கள், புதிய தொலைபேசி இணைப்புக்கள் என்பன காணப்படுகின்றன. ஆனால் தொழில் வாய்ப்புக்கள் எதுவுமில்லை’ என மூன்று பிள்ளைகளின் தகப்பனாரான ருவேந்திரதாஸ் தெரிவித்தார். இவர் தற்போது கோழி வளர்ப்பு மற்றும் கூலித் தொழில் மூலம் தனது குடும்பத்தைப் பராமரித்து வருகிறார்.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் 3.5 பில்லியன் டொலர் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டங்களில் பாரிய கட்டுமானத் திட்டங்கள் அதாவது வீதிகள், நெடுஞ்சாலைகள், மின்சாரம் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. முன்னாள் போர் வலயங்களில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதன் ஊடாக மீளிணக்கத்தை மேற்கொள்வதற்காகவே இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

‘பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டு முன்னாள் போர் வலயத்தில் முன்னெடுக்கப்படும் கட்டுமானத் திட்டங்கள் மூலம் நாங்கள் சகவாழ்விற்கான எமது உறுதிப்பாட்டைக் காண்பிக்கின்றோம்’ என 2011ல் வடக்கில் புதிய தொடருந்துப் பாதையை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது முன்னாள் அதிபர் ராஜபக்ச தெரிவித்தார்.

‘எமது நாட்டிற்குப் புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் ஒன்றிணைக்கும் பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்’ என முன்னாள் அதிபர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

போர் வலயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் சிறிலங்கா அரசாங்கத்தால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இவை அனைத்தும் தொழிற் சந்தையை மேம்படுத்தத் தவறியுள்ளன என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெருமளவான நிதி கட்டுமானத் திட்டங்களை நோக்கி ஒதுக்கப்படுவதும், கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு வரிச் சலுகைகளை வழங்கி அவற்றுக்கு உந்துசக்தி வழங்காமையுமே இவ்வாறான தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்தமைக்கான பிரதான காரணமாகும் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறைந்த வட்டியுடனான கடன்களை வழங்குதல் மற்றும் தொழிற் பயிற்சிகளை வழங்குதல் போன்ற பல்வேறு வழிகளின் மூலம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் சுயதொழில்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புக்களையும் சிறிலங்கா அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் வழங்கத் தவறியுள்ளன.

‘போரால் பாதிக்கப்பட்ட வலயத்தில் தனியார் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி, தொழினுட்பம் மற்றும் சந்தை வாய்ப்பு போன்றவற்றின் மூலம் ஆதரவளித்து அவற்றை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தின் முதன்மைப் பொருளியலாளர் அனுஸ்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் போர் வலயத்தில் 2010 மற்றும் 2012ம் ஆண்டுகளுக்கு இடையில் பாரிய கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இக்காலப் பகுதியில் சிறிலங்கா முழுமையும் 422,111 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதாகவும் இவற்றுள் 5.8 சதவீனம் அதாவது 24,303 தொழில் வாய்ப்புக்கள் மட்டுமே வடக்கு மாகாணத்தில் வழங்கப்பட்டதாகவும் மத்திய வங்கியின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

பொதுத் திட்டங்களில் சிறிலங்கா இராணுவ வீரர்களையே முன்னாள் அரசாங்கம் உள்வாங்கியதாக பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவரான முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் தெரிவித்துள்ளார். உள்ளுர் மக்கள் குறிப்பாக இளையோர்கள் தொழில் வாய்ப்பைப் பெறுவதை திட்டமிட்டுத் தட்டிக்கழிக்கின்ற சிறிலங்காவின் மூலோபாயமாகவே இது நோக்கப்பட முடியும்.

12,000 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வுப் பயிற்சிகளை நிறைவு செய்து அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுள் அதிகமானோர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர்களுள் 3000 பேர் மட்டுமே நிரந்தர தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்களுள் அதிகமானோர் சிறிலங்கா காவற்துறையின் கீழ் செயற்படும் சிவில் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.

வடக்கு மாகாணத்தில் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகியன காணப்படுகின்றன. இங்கு தொழில் வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாகும். தேசிய வேலை வாய்ப்பற்றோரின் வீதமானது 4.3 ஆகவும் கிளிநொச்சியின் வேலைவாய்ப்பற்றோரின் சதவீதம் 7.6 ஆகவும் காணப்படுவதாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

வடக்கு மாகாணத்தின் வேலை வாய்ப்பற்றோர் சதவீதம் 5.3 ஆகவும், கிழக்கு மாகாணத்தில் இது 4.9 சதவீதமாகவும் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணமும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போரால் பாதிக்கப்பட்ட பிறிதொரு மாகாணமாகும். இவ்விரு மாகாணங்களினதும் வேலைவாய்ப்பற்றோர் வீதம் மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகமாகும்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை மேம்படுத்த வேண்டும் என துறைசார் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘இப்பிராந்தியங்களில் புதிய தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் போது இவற்றின் உள்ளுர் பொருளாதாரமும் பலம் பெறும்’ என சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தின் விஜேயசிங்க தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னேடுப்பதாக சிறிலங்காவின் தற்போதைய சிறிசேன அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய போதிலும் இதற்கான பணிகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை.

‘நாங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறோம். இங்குள்ள மக்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும் அதேவேளையில் வெளிநாட்டு முதலீடுகளையும் உள்வாங்குவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளோம். கடன் மற்றும் ஏனைய மானிய உதவிகளையும் வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளன’ என சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

போரில் பங்குகொண்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய நிகழ்ச்சித் திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் என ருபேந்திரதாஸ் நம்புகிறார்.

இவரைப் போன்ற முன்னாள் போராளிகள் தமக்கான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களைச் சந்திக்கின்றனர். ‘நாங்கள் கறை படிந்த வாழ்வையே வாழ்கிறோம்’ என ருவேந்திரதாஸ் மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

ஆங்கில மூலம் – அமந்த பெரேரா

வழிமூலம்  – irin

மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *