இந்தியா- பாகிஸ்தான் மோதல் – கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நேற்று தேசிய பாதுகாப்புச் சபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.
தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், , இரு பரம எதிரிகளுக்கும் இடையிலான போட்டியைக் காண வரும் ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
போட்டியைக் காண இரு நாடுகளின் மூத்த இராஜதந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் வருவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய போட்டியை முன்னிட்டு, எந்த அவசர சூழ்நிலையிலும் பயன்படுத்துவதற்காக, சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்திகள் பல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் இரண்டு நாடுகளின் அணிகள், இராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முழு மைதானத்தின் பாதுகாப்பும், காவல்துறை சிறப்பு அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக காவல்துறை, கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் அரச புலனாய்வு சேவை உள்ளிட்ட 2800 அதிகாரிகள், கண்காணிப்பு பணிகளுக்காக மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிறுத்தப்படுவார்கள் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போட்டியை குறிவைத்து நடத்தப்படும் எந்தவொரு சைபர் தாக்குதலையும் தடுக்க, காவல்துறை இணையக் குற்றப் பிரிவின் ஒரு குழுவும் தயார் நிலையில் இருக்கும்.
750 சிறிலங்கா இராணுவத்தினரைக் கொண்ட குழுவும் மைதானத்திற்கு அருகில் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்காக, ஒரு சிறப்பு “ட்ரோன் நடவடிக்கை”யை மேற்கொள்வதற்கு சிறிலங்கா விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரேமதாச மைதானத்திற்கு அருகில், அனுமதிக்கப்படாத ட்ரோன்கள் பறக்க விடப்படுவதை உறுதி செய்யும் வகையில், ட்ரோன்களைத் தடுக்கும் “ஜாமர்”கள் நிறுத்தப்படும்.
இன்றைய ஆட்டத்திற்காக சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்களின் அணியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சிறப்பு காவல்துறை உந்துருளிப் பிரிவுகள் மைதானத்தின் அருகே ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான விரிவான பாதுகாப்பு நடவடிக்கை நேற்று மாலை மைதானத்தின் சுற்றுப்புறத்திலும், மைதானத்திற்குள்ளேயும் சோதனை நடவடிக்கையுடன் தொடங்கியது.
போட்டிக்குப் பின்னர், கடைசி பார்வையாளர் மைதானத்தை விட்டு வெளியேறும் வரை சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடரும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
