போர்க்குற்ற விசாரணைக்கு நான்கு வித நீதிக்கட்டமைப்புகளை ஆராய்கிறதாம் சிறிலங்கா
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நான்கு விதமான நீதித்துறைக் கட்டமைப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைக்கு அமைய, இறுதிப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான நான்கு விதமான நீதித்துறைக் கட்டமைப்புக்களை, அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
இது தொடர்பான இறுதி முடிவு பெப்ரவரி மாதத்துக்கு முன்னர், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். தெரிவு செய்யப்படும் உள்நாட்டுப் பொறிமுறையானது நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காக, மார்ச் மாதம் முன்வைக்கப்படும்.
இதனால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஜூன் மாத அமர்வில் வாய்மொழி அறிக்கையைச் சமர்ப்பிக்க போதிய அவகாசம் கிடைக்கும்.
உருவாக்கப்படவுள்ள விசாரணைப் பொறிமுறை, எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று, கலப்பு நீதிமன்றமாக இருக்கமாட்டாது.
உள்நாட்டு விசாரணை ஆரம்பித்த பின்னர் வெளிநாட்டு தொழில்நுட்ப ஆலோசனையைப் பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எத்தகைய வடிவில் அமைத்தாலும், உள்நாட்டுப் பொறிமுறையின் பொறுப்பு உண்மையைக் கண்டறிதல், பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கல், மீண்டும் குற்றங்கள் நடக்காதிருப்பதை உறுதிசெய்தல் என்பனவாகவே இருக்கும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தொடர்பான சிறிலங்காவின் எதிர்வினைகளை அனைத்துலக சமூகம் அவதானித்துக் கொண்டிருப்பதால் நாம் விரைந்து செயற்பட வேண்டும்.
இந்தப் பின்னணியில் தான், கடந்தவாரம் கொழும்பு வந்த பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வைர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஜூன் மாதம் சிறிலங்கா சமர்ப்பிக்கும் வாய்மொழி அறிக்கை வெறும் பூசிமெழுகலாக இருக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்” என்றும் அவர் கூறினார்.
திருகோண மலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை மூதூர் பிரான்ஸ் மருத்துவக்குழுவினர் படு கொலை இரண்டையும் விசாரிக்க இத்தனை ஆண்டுகள்??? முள்ளி வாய்க்கால் படுகொலையை விசாரிக்க எத்தனை ஆண்டுகள் செல்லும்