சூளைமேடு கொலை வழக்கு – டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நேற்று நீதிமன்றில் சாட்சியம்
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஈபிடிபியின் பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான, கொலை வழக்கில் சாட்சி விசாரணை நேற்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது.
சென்னை சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டவாளர் திருநாவுக்கரசு இறந்தார். இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 9 பேர் மீது தமிழ்நாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தநிலையில், டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தமிழ்நாடு காவல் துறை சார்பில் கோரப்பட்டது.
இதன்பேரில், வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் நேரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப நீதிபதி சாந்தி உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரச சட்டவாளர் எம்.பிரபாவதி முன்னிலையாகி சாட்சிகள் விசாரணையின்போது டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் அல்லது உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, நேரலை காணொளி மூலம் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று முன்னரே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
அதற்கு நீதிபதி சாந்தி, நேரலை காணொளி வசதியை நீதிமன்றத்தில் செய்து தரக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு கடிதம் எழுத வேண்டியுள்ளது. அதன்பின்னர் டக்ளஸ் தேவானந்தா நேரில் முன்னிலையாவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
இதையடுத்து, காவல்துறை தரப்பு சாட்சி குருமூர்த்தி முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து விசாரணையை பெப்ரவரி முதலாம் நாளுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.