மேலும்

கடற்படை புலனாய்வு முகாமிலேயே ரவிராஜ் கொலை திட்டமிடப்பட்டது – நீதிமன்றில் சாட்சியம்

N.Ravirajகொழும்பு, கங்காராம வீதியில் உள்ள லோன்றிவத்தை சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு முகாமிலேயே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலைக்கான திட்டம் தீட்டப்பட்டது என்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு நேற்று, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, இந்தப் படுகொலையுடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு, தற்போது அரசதரப்பு சாட்சியாக மாறியுள்ள விஜயவிக்கிரம மனம்பெரிகே சஞ்ஜய பிரீதி விராஜ் சாட்சியம் அளித்தார்.

காவல்துறையினருக்கு இவர் முன்னர் அளித்திருந்த மூன்று வாக்குமூலங்கள் நேற்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன. அப்போது தாம் முன்னர் வழங்கிய இந்த வாக்குமூலங்கள் உண்மையானவை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான காமினி செனிவிரத்ன, நாரஹேன்பிட்டி மன்னிங் டவுனில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை துப்பாக்கியால் சுட்டதை தாம் பார்த்ததாகவும், அவர் சாட்சியமளித்தார்.

“இந்தப் படுகொலைக்கான திட்டம் லோன்றிவத்த கடற்படைப் புலனாய்வு முகாமில் தான் தீட்டப்பட்டது.

மட்டக்களப்பில் விசேட நடவடிக்கைகளுக்கான உந்துருளிப் படைப்பிரிவில் இருந்த போது, பழனிச்சாமி சுரேசுடன் எனக்குத் தொடர்புகள் இருந்தன. 2006இல் கொழும்பு வந்த பின்னரும் அந்த தொடர்பு நீடித்தது.

அவர் மூலமாகவே, பிரசாத் குமார, சரண், வஜிர, காமினி செனிவிரத்ன, பபியன் ரோய்ஸ்ரன், மற்றும் ஏனைய புலனாய்வு அதிகாரிகள் அறிமுகமாகினர்.

கங்காராம வீதியில் உள்ள புலனாய்வு முகாமுக்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தவர் பழனிச்சாமி சுரேஸ் தான்.

2006 நவம்பர் 8ஆம் நாள் ரவிராஜைக் கொல்ல தாம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்து விட்டதாக அவர் என்னிடம் கூறினார்.

2006 நவம்பர் 10ஆம் நாள், சந்தேக நபர்களை ஏற்றிச் செல்வதற்கு உந்துருளியில் பொரளை சேமக்காலை சந்திக்கு வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அப்போது, பிரசாத், செனிவிரத்ன, வஜிர மற்றும் மூவர்,  இரண்டு முச்சக்கரவண்டிகளில் வந்து இறங்கினர். மேலும் ஒரு முச்சக்கர வண்டியில், பழனிச்சாமி சுரேஸ்,சரண், பபியன் ரோய்ஸ்ரன் ஆகியோர் வந்திறங்கினர்.

மார்த்தா வீதியில் தயாராக நிற்குமாறும், சுட்டுவிட்டு தப்பி வருபவரை அந்த இடத்தில் இருந்து ஏற்றிச் செல்லுமாறும்  நான் கேட்கப்பட்டிருந்தேன்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் வரும் வரை செனிவிரத்ன ஒரு கறுப்பு பையுடன் காத்திருந்தார்.

அப்போது, ரவிராஜின் வாகனத்துக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்து சென்ற செனிவிரத்ன, அவரையும், சாரதி லக்ஸ்மனையும் சுட்டு விட்டு தப்பினார்.

அவரை நான் கங்காராம வீதியில் உள்ள கடற்படை புலனாய்வு முகாமுக்கு  ஏற்றிச் சென்றேன்.

விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரை கொல்வதற்காகவே செல்வதாகவும், துப்பாக்கி ஏந்தியவரை உந்துருளியில் ஏற்றிச் செல்லுமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது.

நாரஹேன்பிட்டியில், துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் வரையில், யாரைக் கொல்வதற்காகச் செல்கிறோம் என்று எனக்குத் தெரியாது.” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையை நீதிவான வரும் 13ஆம் நாளுக்கு ஒத்தி வைத்தார்.

இந்தப் படுகொலை தொடர்பாக 4 சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள், கருணா குழுவைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *