மேலும்

சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டு ஆதிக்கத்தை உடைக்கிறது அமெரிக்கா

eagle-flag-usaசிறிலங்காவின் தென்பகுதியில் 2.5 பில்லியன் டொலர்களை பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்காக முதலீடு செய்வதன் மூலம்,  தற்போது சிறிலங்காவின் தனிப்பெரும் முதலீட்டாளராக விளங்கும் சீனாவை அந்த நிலையிலிருந்து மிக விரைவில் வெளியேற்றுவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த முதலீடானது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீனாவின் துறைமுக நகரத் திட்டம் அவசியமற்றது என்ற நிலையை விரைவில் தோற்றுவிக்கும்.

அமெரிக்கா தனது திட்டத்தை உலகின் மிகப் பாரிய பெற்றோலிய சுத்திகரிப்பு ஒப்பந்தக்காரர்கள், இயக்குனர்கள் மற்றும் முகாமையாளர்களின் உதவியுடன் விரைவில் மேற்கொள்ளவுள்ளது.

அமெரிக்காவின் Fluor Corporation என்ற நிறுவனத்தின் 2.5 பில்லியன் டொலர் முதலீட்டுடன், மேலும் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அனைத்துலக பெற்றோலிய நிறுவனங்களின் ஆதரவுடன்,  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யத்தக்க வகையில்  பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றை சிறிலங்காவின் தென் பகுதியில் அமெரிக்கா நிறுவவுள்ளது.

டெக்சாசை தளமாகக் கொண்டியங்கும் அமெரிக்காவின் Fluor  என்ற கூட்டுத்தாபனமானது FORTUNE சஞ்சிகையின் மிகவும் வியத்தகு பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வரிசையில்,  2015ல் நான்காவது ஆண்டாகத் தொடர்ச்சியாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

சிறிலங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலைத் திட்டமானது அமெரிக்காவின் UOP நிறுவனத்தால் வரையப்படுகிறது. இந்த நிறுவனமானது உலகின் மிகப் பெரிய பெற்றோலிய சுத்திகரிப்பு வடிவமைப்பு நிறுவனமாகும்.

இத்திட்டத்திற்கான வடிவமைப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான தளக்கட்டமைப்புப் பணிகள் இன்னமும் ஆறு மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் UOP நிறுவனமே பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலைக்கான வரைவை வடிவமைத்திருந்தது.

பூகோள பெற்றோலிய தொழிற்துறையில் முதன்மைப் பங்கு வகிக்கும் Fluor   கூட்டுத்தாபனம், கொரியா, யப்பான், சீனா போன்ற அனைத்துலக அளவில் முக்கிய பெற்றோலிய பங்குதாரர்களுடன் இணைந்தே தென்சிறிலங்காவில் பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலைத் திட்டத்தை நிறுவவுள்ளது.

இத்திட்டமானது 2016 யூனில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டமானது 2018ன் இறுதியில் அல்லது 2019ன் ஆரம்பத்தில் நிறைவு செய்யப்படும் போது நாளொன்றுக்கு 100,000 பீப்பாய்கள் பெற்றோலியத்தை சுத்திகரிக்கக் கூடிய திறனைக் கொண்டிருக்கும்.

இந்தப் பெற்றோலியமானது உள்நாட்டுச் சந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

இதன் மூலம் ஏற்றுமதிச் செலவு இல்லாததால் உள்நாட்டு எரிபொருள் விலையிலும் கணிசமானளவு வீழ்ச்சி ஏற்படும்.

சிறிலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் உயர் பதவி வகிக்கும் முகாமையாளர் குழுவிற்கு அமெரிக்காவின் பெற்றோலிய சுத்திகரிப்புத் திட்டம் திருப்தியைத் தரவில்லை எனவும் நெருங்கிய வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்தின் எந்தவொரு உத்தரவாதமும் இன்றியே இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

சிறிலங்காவிற்குத் தேவையான அனைத்துப் பெற்றோலியத்தையும் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் சுத்திகரிக்க முடியவில்லை என்பதாலேயே 15 ஆண்டுகளுக்கும்,  தனக்குத் தேவையான டீசல் மற்றும் பெற்றோலின் 50 சதவீதத்தை சிறிலங்கா இறக்குமதி செய்வதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது மேலும் பெற்றோலிய சுத்திகரிப்பில் ஈடுபடுவதற்கு அதன் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளதுடன் இதன் செயற்பாடுகளையும் விரிவுபடுத்த வேண்டும்.

சப்புகஸ்கந்தை பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தை மேலும் செப்பனிட்டு நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான நிதி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குத் தேவைப்படுகிறது.

சிறிலங்காவின் பாரியதொரு நிறுவனம் ஒன்று இதில் முதலீடு செய்வதில் ஆர்வம் காண்பித்துள்ளது. அம்பாந்தோட்டையில் பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவுமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

ஆனாலும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் 500 ஏக்கர் நிலத்தை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக சிறிலங்காவின் முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

ஆகவே துறைமுக வளாகத்திற்குள் ஏற்கனவே அடையாளங் காணப்பட்ட இரண்டு துண்டு நிலங்களை முதலீட்டு சபை அமெரிக்காவின் திட்டத்திற்காக வழங்கும்.

முதலீடு தொடர்பான வரையறைகள் இவ்வாண்டின் ஆரம்பத்திற்குள் இறுதி வடிவமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகத்திற்குள் உள்ள நிலப்பகுதியானது சுத்திகரிப்பிற்கும், துறைமுகத்திற்கு வெளியேயுள்ள நிலமானது எண்ணெய்க் குதங்களை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

UOP என்கின்ற உலகின் முன்னணி சுத்திகரிப்பு ஆலைகள் வடிவமைப்பாளரால் சிறிலங்காவில் பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கான திட்டம் வரையப்பட்டு இது 2018ன் பிற்பகுதியில் அல்லது 2019ன் ஆரம்பத்தில் நிறைவடையும் போது சிறிலங்காவின் உள்நாட்டிற்குள் பெற்றோலிய விலைகள் மீதான தாக்கம் கணிசமானளவில் குறைவடைந்திருக்கும்.

அத்துடன் இதன் மூலம் சிறிலங்காவின் எரிசக்திப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *