மேலும்

மாதிரிக் கிராம பொறியில் சிக்கிய கேப்பாப்பிலவு மக்கள்

Kepapulavதிருச்செல்வன் கேதீஸ்வரன் தனது குடும்பத்துடன் முல்லைத்தீவிலுள்ள கேப்பாப்பிலவு என்கின்ற கிராமத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக சென்றபோதிலும் அவரது நம்பிக்கைகள் எல்லாம் சிதைந்துள்ளன.

சிறிலங்கா இராணுவத்தினரின் மாதிரிக் கிராமமாக கேப்பாப்பிலவு தெரிவு செய்யப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர்.  போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றத்தில் உள்வாங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுள் கேதீஸ்வரனும் ஒருவராவார்.

இவரது சொந்தக் கிராமம் 1-2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு இவரால் செல்ல முடியவில்லை. விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்த கேதீஸ்வரன் தற்போது மேசன் தொழிலில் ஈடுபடுகிறார். ஏனெனில் இவரது பல ஏக்கர் நெல்வயல்கள் போரின் இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டன.

இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாரான இவர் தனது குடும்பத்தைப் பராமரிப்பதில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்கின்றார். ‘தற்போது பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கிராமத்தில் செய்யக்கூடிய தொழில்கள் எதுவுமில்லை. நாங்கள் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதால் எமக்குத் தொழில் தருவதற்கு எவரும் முன்வரவில்லை. இதனால் நான் வேறு கிராமங்களுக்கு தொழில் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என கேதீஸ்வரன் தெரிவித்தார்.

2012ல் உருவாக்கப்பட்ட ‘மாதிரிக் கிராமம்’ என அழைக்கப்படும் கேப்பாப்பிலவு கிராமமானது மீள்குடியேற்ற அமைச்சின் அனுசரணையுடன் சிறிலங்கா இராணுவத்தினரால் வடிவமைக்கப்பட்ட கிராமமாகும்.

பிலாக்காடு, சூரியபுரம், கேப்பாப்பிலவு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய மாதிரிக் கிராமமாகும். குறைந்தது 300 குடும்பத்தவர்களுக்குச் சொந்தமான காணிகள் பாதுகாப்பு அமைச்சால் கையகப்படுத்தப்பட்டு அதற்குப் பதிலாக அரச காணிகளில் இந்த மக்கள் தற்காலிகமாகக் குடியேற்றப்பட்டனர். இந்தக் கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்தக் கிராமத்தில் குடியேற்றப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்காகவும் 24×10 அடி அளவில் சிறிலங்கா இராணுவத்தினராலும் மீள்குடியேற்ற அமைச்சாலும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இக்கிராமத்தின் உள்வீதிகள் மற்றும் சிறிய பாலங்கள் போன்றன சிறிலங்கா இராணுவத்தினரால் நிரந்தரமாகக் கட்டப்பட்டுள்ளன.

‘எமது சொந்தக் கிராமத்திற்கு நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். இதுவே எமக்குத் தேவையானதாகும். எம்மிடம் இராணுவத்தினர் எமது நிலங்களைத் திருப்பித் தந்தால் நாங்கள் இராணுவத்திலோ அல்லது வேறெந்த அதிகாரிகளிடமோ தங்கி வாழவேண்டிய நிலை ஏற்படாது. கடந்த காலத்தில் அவர்கள் எமக்காகச் செய்தவைகளை நாம் நன்றியுடனேயே நோக்குகிறோம். ஆனால் அவர்கள் எமது நாளாந்த வாழ்வில் தலையீடு செய்வதை நாங்கள் விரும்பவில்லை’  என கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த மக்கள் தமது சொந்த ஊருக்குச் செல்வது என்பது சாத்தியமற்றது என முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். ‘விவசாயம் செய்வதற்காக இந்த மக்களுக்கு மாளிகைத்தீவில் மேலும் நிலங்களை வழங்க நாம் உத்தேசித்துள்ளோம். ஏனெனில் இந்த மக்களுக்குச் சொந்தமான நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் தம் வசம் வைத்திருப்பதாலேயே விவசாய நிலங்களை வழங்க வேண்டும் என நாம் தீர்மானித்துள்ளோம்’ என முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.

இந்த மக்களின் நாளாந்தச் செயற்பாடுகளில் இராணுவத்தினர் தலையீடு செய்கின்றனர் என்கின்ற குற்றச்சாட்டை அரசாங்க அதிபர் மறுத்ததுடன், சிறிலங்கா இராணுவத்தினர் கட்டுமானப் பணிகளில் மாத்திரம் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘அவர்களுக்கான கூலி மிகவும் குறைவானது. இதனாலேயே இவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்’ என அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்பு எனக் கூறிக்கொண்டு சிறிலங்கா இராணுவமானது மக்களின் சொந்த வயல்நிலங்களை விடுவிக்காது காலத்தை இழுத்தடிப்பதாகவும் அத்துடன் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாகக் குடியேற்ற முயற்சிப்பதாகவும் கேப்பாப்பிலவு கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் இராசையா பரமேஸ்வரன் தெரிவித்தார்.

‘நாங்கள் இந்த விவகாரத்தை சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அரசியல்வாதிகள் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இதுவரை எவ்வித சாதகமான பதிலையும் வழங்கவில்லை. ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தல் பரப்புரையின் போது இறுதியாக அரசியல்வாதிகள் எம்மிடம் வந்தார்கள். அதன்பின்னர் இவர்கள் எமது கிராமத்திற்கு ஒருபோதும் வரவில்லை’ என இராசையா பரமேஸ்வரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த நவம்பரில் பலவந்தமாக காணாமற் போனவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு கேப்பாப்பிலவு கிராமத்திற்குச் சென்றபோது ‘மாதிரிக் கிராமம்’ என்கின்ற வார்த்தையை சிறிலங்கா இராணுவத்தினர் பெயர்ப்பலகையில் நீக்கியிருந்தனர்.

இராணுவத்தினரின் இந்தச் செயல் தன்னை விழிப்புறச் செய்துள்ளதாகவும் இதன் மூலம் கேப்பாப்பிலவு கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தின் நிரந்தர கிராமவாசிகள் என்பதை ஐ.நா பணிக்குழு அதிகாரிகளுக்குக் காண்பித்துள்ளதாகவும் திரு.பரமேஸ்வரன் தெரிவித்தார்.

Muttaiah-Alagi

முத்தையா அழகி

இவ்வாறானதொரு மாதிரிக் கிராமத்தால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. கடந்த மாதம், கேப்பாப்பிலவு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறுவன் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இந்த மாதிரிக் கிராமத்தில் பல்வேறு வகைப்பட்ட தொழில்களைச் செய்யும் சமூகத்தினர் ஒன்றாக வாழ்கின்றனர்.  இந்தக் கிராமத்தில் வாழும் ஒரு பகுதியினர் தாம் ஓரங்கட்டப்படுவதாக கருதுகின்றனர். அதாவது கிணறு கட்டுவதிலிருந்து நிலங்களை வழங்குவது வரை அனைத்து விடயங்களிலும் தம் மீது பாரபட்சம் காண்பிப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

கேப்பாப்பிலவு ஆரம்பப் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. பெற்றோர்கள் குறைந்த கல்வியறிவுடன் விளங்குதல் மற்றும் வறுமை போன்றனவே மாணவர்களின் வரவின்மைக்குக் காரணம் என அதிபர் எஸ்.உதயசங்கர் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு இடம்பெற்ற தரம் 05 புலமைப்பரீட்சையில் கேப்பாப்பிலவு ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த எந்தவொரு மாணவர்களும் சித்தியடையவில்லை.

‘பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சித் திட்டங்களை வழங்க நாம் முயற்சித்தோம். ஆனால் பிள்ளைகள் உழைக்கக் கூடிய வயதிற்கு வந்தால் போதும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாகும். அருகிலுள்ள இரண்டாந்தரப் பாடசாலைக்கு குறைந்தளவு மாணவர்களே க.பொ.த.சாதரண தரத்தில் கற்பதற்காகச் செல்கின்றனர்’ என திரு.உதயசங்கர் மேலும் குறிப்பிட்டார்.

கேப்பாப்பிலவு கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மிகவும் நலிவுற்றவர்களக வாழ்கின்றனர். இந்தக் குடும்பங்கள் வறுமையின் தாக்கத்திற்கு அதிகம் உட்பட்டுள்ளனர்.

இக்கிராமத்தில் 60 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள் காணப்படாததாலும் மாற்று வருவாய்க்கான வழிகள் இல்லாததாலும் பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர்.

கேப்பாப்பிலவுக் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தொழில் தேடி வேறு கிராமங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளனர். இதனால் குடும்பப் பிரச்சினைகள் உருவாவதாக மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் உபதலைவியான சிவன் சங்கீதா தெரிவித்தார்.

‘இந்தப் பெண்கள் தமது வீடுகளை விட்டும் கிராமத்தை விட்டும் தொழில் தேடி வேறிடங்களுக்குச் செல்வதால் இவர்களது குடும்பங்களைப் பராமரிக்க முடியவில்லை. இதனால் குடும்பப் பிரிவுகளும் ஏற்படுகின்றன. அண்மையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவருடன் சென்றுவிட்டார். இவ்வாறான குடும்பப் பிரிவுகள் அதிகம் ஏற்படுகின்றன’ என சங்கீதா சுட்டிக்காட்டினார்.

இந்தக் கிராமத்தின் பெரும்பாலான மக்களின் சொந்த நிலங்கள் மற்றும் தென்னந்தோட்டங்கள் போன்றன தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இவர்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பினால் இவர்களது வாழ்வு வளம்பெறும் எனவும் சங்கீதா மேலும் குறிப்பிட்டார்.

போரின் இறுதிக்கட்டத்தில் தனது கணவனை இழந்த முத்தையா அழகி தன்னையும், கணவனை இழந்து வாழும் தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளார். முந்திரிப்பருப்பு பிடுங்குவதன் மூலம் இவர் நாளொன்றுக்கு ரூபா 300 உழைக்கிறார். சிலவேளைகளில் இவர் கூலித்தொழிலுக்கும் செல்கிறார்.

Rasan-Selvam

இராசன் செல்வம்

‘எனக்கு வரதட்சணையாக இரண்டு ஏக்கர் தென்னந் தோட்டம் உள்ளது. ஆனால் இது தற்போது இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனது தோட்டத்தைப் பராமரிப்பதற்கு எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் நான் கூலி வேலை செய்ய வேண்டிய தேவையில்லை’ என அழகி தெரிவித்தார்.

ஈருருளிகளைத் திருத்திக் கொடுக்கும் பணியில் தான் ஈடுபடுகின்ற போதிலும் பெரும்பாலான மக்கள் அதற்கான கட்டணங்களைச் செலுத்துவதில்லை என கேப்பாப்பிலவுக் கிராமத்தைச் சேர்ந்த இராசன் செல்வம் கூறினார். ‘இக்கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் ஐந்து பேரைக் கொண்ட எனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய தேவையில் உள்ளேன் என்பதை இந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என இராசன் தெரிவித்தார்.

ஈருருளிகளைத் திருத்தும் தொழிலை விட வேறொரு தொழிலும் தனக்குத் தெரியாது எனவும் இராசன் குறிப்பிட்டார்.

‘இந்த மாதிரிக் கிராமத்தில் வசிப்பதானது அகதி முகாமில் வாழ்வது போன்ற உணர்வையே தருகிறது. நாங்கள் முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த மெனிக்பாம் முகாமை விட இதுவொன்றும் சிறந்ததல்ல. நான் எனது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல வேண்டும். எனது சொந்தக் கிராமத்திலேயே நான் இறக்க வேண்டும்’ எனவும் இராசன் தெரிவித்தார்.

கேப்பாப்பிலவு மக்களால் தமது சொந்த இடங்களுக்கான மீள்குடியேற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளுக்கான கட்டளைத் தளபதி உடனடியாகப் பதிலளிக்க முடியவில்லை எனவும் இது தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார்.

ஆங்கில மூலம் – S. Rubatheesan
வழிமூலம்         – sunday times
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *