மேலும்

கோட்டாவிடம் மெய்நிகர் முறையில் சாட்சியங்களை பதிவு செய்த யாழ். நீதிமன்றம்

யாழ்ப்பாணத்தில் ஜேவிபி அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இன்று நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியம் அளித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக இருந்த காலகட்டத்தில், 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தம் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, கோட்டாபய ராஜபக்ச பல்வேறு காரணங்களைக் கூறி மன்றில் முன்னிலையாகாமல் தவிர்த்து வந்தார்.

இந்த விவகாரம் இறுக்கமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும், மெய்நிகர் முறையில் சாட்சியமளிக்கத் தயார் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.

இதற்கமைய, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இருந்து இன்று மெய்நிகர் முறையில் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.

அவரிடம் இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 3 மணிவரை சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் அவரிடம் இருந்து மேலதிக சாட்சியங்கள், நொவம்பர் 27ஆம் நாள் பிற்பகல் 1.30 மணியளவில் பதிவு செய்யப்படும் என யாழ்ப்பாணம் நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

அதேவேளை இந்த வழக்கில்,  கோட்டாபய ராஜபக்ச கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில்  சாட்சியம் அளிக்க இன்று  முன்னிலையாகிய நிலையில், கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்,  லலித் மற்றும் குகன் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் உண்மையை வெளிப்படுத்தக் கோரும் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *