மேலும்

சிறிலங்காவில் பயணிகள் ட்ரோன் சேவை- அறிமுகப்படுத்த சீனா திட்டம்

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம்  சீன நிறுவனத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

அவசரகால பேரிடர் மீட்பு மற்றும் கடல்சார் மீட்புப் பணிகளுக்கும் இந்த ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்து  சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற  சிறப்பு கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சீனாவின் ஈ-ஹாங் (E-Hang) நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கொனோர் யாங் மற்றும் செயற்பாட்டு பொது மேலாளர் சியாவோ நா லீ ஆகியோர் தலைமையிலான தூதுக்குழு இந்தச் சந்திப்பில் பங்கேற்றது.

இந்த பயணிகள் ட்ரோன் சேவை, சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், பார்வையாளர்களுக்கு முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு விரைவான, ரம்மியமான அணுகலை வழங்குவதோடு, தேவைப்படும்போது அவசரகால பேரிடர் நடவடிக்கைகள் மற்றும் கடல்வழி மீட்பு தேவைகளுக்கான ஒரு கருவியாகவும் செயற்படும் என்று அமைச்சர் அனுர கருணாதிலக கூறினார்.

சிகிரியா மற்றும் பிதுரங்கல போன்ற பாரம்பரியத் தலங்களுக்கும், கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கொழும்புக்குள்ளும் சென்று வருவதற்கு ட்ரோன்களைப்  பயன்படுத்துவதற்கான முன்மொழிவுகள் மற்றும்  அவை சுற்றுலா அனுபவத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பது குறித்து இந்தக்  கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

பார்வையாளர்களுக்கு இந்தச் சேவையைக் காட்சிப்படுத்த துறைமுக நகரத்தில் ஒரு மாதிரி வலயத்தை தொடங்கவும் ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு விடுதிக்குச் செல்லும் ஒரு சுற்றுலாப் பயணிக்கு ஒரு பயணத்திற்கு 20 முதல் 30 அமெரிக்க டொலர்கள் வரை செலவாகும் என்றும், இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வேகமான, உயர்தரத் தேர்வாக அமையும் என்றும் ஈ-ஹாங் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விமானப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை கட்டமைப்புகள், வான்வெளி கட்டுப்பாடு, அவசரகால நடைமுறைகள், இணையப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் நியமிக்கப்பட்ட தரையிறங்கும் இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறிலங்காவின்சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி இல்லாமல், வணிகச் செயற்பாடுகளைத் தொடங்க முடியாது என்பதால், பாதுகாப்பு கரிசனைகள் குறித்து அமைச்சர் அனுர கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட தொலைக்கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அமைச்சு, விமானப்படை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, முதலீட்டுச் சபை, துறைமுக நகர ஆணைக்குழு, சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழு மற்றும் விமான நிலைய, விமான நிறுவன அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு அவசியம் எனவும் இதன்போது அடையாளம் காணப்பட்டது.

ஈ-ஹாங் பிரதிநிதிகள், eVTOLகள் (மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறங்கும் வானூர்திகள்) என அறியப்படும் இந்த ட்ரோன்களின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பத்தை விளக்கினர்.

இவை புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் 900 சதுர மீட்டருக்கும் குறைவான இடமே தேவைப்படுகிறது.

இரண்டு பயணிகள் பயணிக்கும் மாதிரியில், 16 சுழலிகள் உள்ளன, அவற்றுள் நான்கு மட்டுமே அவசரகால தரையிறக்கத்திற்குத் தேவைப்படும்.

மேலும், நிலைத்தன்மையைப் பேணுவதற்காக 12 மின்கலத் தொகுப்புகள் மற்றும் மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் இதில் உள்ளன.

இந்த ட்ரோன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொலைவிலிருந்து இயக்கப்படும்.

இது சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் முக்கிய இடங்களை ஆராய்வதற்கான ஒரு வேகமான, எதிர்கால வழியை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *