மேலும்

உண்மைகளை மறைத்த சுரேஷ் சாலே – அம்பலப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல்

சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பல உண்மைகளை வெளிப்படுத்தவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து,  சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தாக்கல் செய்துள்ள ரிட் மனு, மீதான விசாரணையின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், விசாரணை இடம்பெற்ற போது, குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மேலும் தெரிவிக்கையில்.

“இந்த மனு முதலில் மே 7ஆம் நாள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, மனுதாரர் தரப்பு ஆசாத் மௌலானாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தங்கள் வாதங்களை முன்வைத்தது.

அதன்பின்னர், ஜூன் 04ஆம் நாள் மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, புலனாய்வாளர்களின் காவலில் மனுதாரர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஒரு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

ஜூன் 10ஆம் நாள், மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்க  அமெரிக்காவிலிருந்து வந்த எவ்.பி.ஐ. புலனாய்வாளர்கள், முகமட் நௌபர் மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்திருந்ததாக மனுதாரர் கூறினார்.

ஜூன் 11ஆம் நாள் மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, ஜெயகி டி அல்விஸ், மலல்கொட குழு அறிக்கை மற்றும் இமாம் ஆணைக்குழு அறிக்கை உள்ளிட்ட 5 அறிக்கைகளை மேற்கோள்காட்டி, அந்த ஆணைக்குழு அறிக்கைகளில் தனக்கு எதிரான விடயங்கள் இல்லாததால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவால் விசாரணைகளை நடத்த முடியாது என்று கூறப்பட்டது.

இவ்வாறு, மனுதாரர்கள் ஏழு நாட்கள் தங்கள் வாதங்களை முன்வைத்து, இந்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவால் நடத்தப்பட்டிருக்கக் கூடாத ஒரு விசாரணை என்று அடிப்படையில் கூறினர்.

மனுதாரருக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பான விசாரணைகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் கீழ் நடத்தப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலையில், தனக்கு எதிராக நடத்தப்படும் விசாரணையிலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மனுதாரர் கூறுகிறார்.

ஷானி அபேசேகர தன்னிடம் ஒரு வன்மமான மனப்பான்மையைக் கொண்டிருப்பதாக மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த விசாரணை தொடர்பான முதல் ‘பி’ அறிக்கை 2024  நவம்பர் 11ஆம் நாள் சமர்ப்பிக்கப்பட்ட போது, ஷானி அபேசேகர பொலிஸ் சேவையில் கூட இல்லை.

2024 நவம்பர் 15ஆம் நாள்  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுரேஷ் சாலே மற்றும் பிள்ளையன் ஆகியோருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற்றது.

அந்த உத்தரவுகளைப் பெற்றவர் ஷானி அபேசேகர அல்ல. அந்த நேரத்தில் மங்கள தெஹிதெனிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பதாளராக இருந்தார்.

இந்த விசாரணை மற்றொரு பணிப்பாளரான ஹிமேஷ முத்துமாலியின் கீழ் நடைபெற்றுள்ளது.

இது ஒரு தீவிரமான விசாரணை. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பதிலாக,  பறக்கோட்டை காவல்துறை ந்த விசாரணையை நடத்த வேண்டுமா?”

மனுதாரர் சுரேஷ் சாலே, பாதுகாப்புப் பயிற்சிக்காக 2019 ஜனவரி 03ஆம் நாள் இந்தியாவுக்குப் புறப்பட்டு, அதே ஆண்டு டிசம்பரில் திரும்பியதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கோடு, மனுதாரரின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு மற்றும் அவரது அதிகாரபூர்வ கடவுச்சீட்டு ஆகியவற்றின் பிரதிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் தனது பணிகளை முடித்த பின்னர், தனது இராஜதந்திரக் கடவுச்சீட்டை வெளிவிவகார  அமைச்சிடம் ஒப்படைத்ததாக மனுதாரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அவர் அந்தத் இராஜதந்திரக் கடவுச்சீட்டின் உண்மை பிரதியை இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

கடவுச்சீட்டு வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அதன் உண்மை பிரதியை நீதிமன்றத்தில் எப்படிச் சமர்ப்பிக்க முடியும்?

எந்தவொரு கடவுச்சீட்டிலும் 64 பக்கங்கள் இருக்கும். ஆனால், அவரது இராஜதந்திர கடவுச்சீட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 அல்லது 18 பக்கங்கள் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதிகாரபூர்வ கடவுச்சீட்டின் நான்கு பக்கங்கள் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவரது அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டின் 56-வது பக்கத்தில் பல முத்திரைகள் உள்ளன. , இந்திய குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் 2019 மே 18 நாளிட்ட  முத்திரை ஒன்றில்  “புறப்பாடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர், இந்திய குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் 2019 ஜூன் நாளிட்ட மற்றொரு முத்திரையில்  “நுழைவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் தான், இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பாதுகாப்புப் பயிற்சிக்குச் சென்ற பின்னர் அப்படியென்றால், அவர் இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கிறார் என்பது இந்த முத்திரைகளிலிருந்து தெளிவாகிறது.

இந்த விசாரணைகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்ற புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒரு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு சுமார் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு முன்னர், அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, தனக்குத் தொலைபேசி அழைப்பு விடுத்து, பிரிகேடியர் சுரேஷ் சாலே தன்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்ததாக ஹேமசிறி பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் தனக்கு வேலை இல்லை என்றும், தன்னைச் சந்திக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் சுரேஷ் சாலே சிறிலங்காவில் இருந்தார் என்று ஆசாத் மௌலானாவின் வாக்குமூலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் சுரேஷ் சாலே இந்த உண்மைகளில் எதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அவர் அவை அனைத்தையும் மறைத்துள்ளார்.

ஒரு ரிட் மனுவிலிருந்து நிவாரணம் பெற, அனைத்து உண்மைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

அவர் தூய்மையான கரங்களுடன் நீதிமன்றத்தின் முன் வரவில்லை. சட்டத்தின் முன் இத்தகைய மனுவை எவ்வாறு நிலைநிறுத்த முடியும்?

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மனுதாரர் சுரேஷ் சாலே எவ்வாறு இடையூறு செய்தார் என்பது, அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி காவல்துறை மா அதிபராக இருந்த பிரசாத் ரணசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அளித்த வாக்குமூலத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு சாய்ந்தமருது பகுதியில் நடந்த வெடிப்பில் “சாரா ஜஸ்மின்” என்ற பெண் இறக்கவில்லை என்றும், அவர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் ஒரு பேச்சு இருந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த விடயத்தை முறையாக விசாரிக்கவில்லை என்று சுரேஷ் சாலே விசாரணை மறுஆய்வுக் கூட்டங்களில் குற்றம்சாட்டியிருந்தார்.

சாரா ஜாஸ்மின் என்ற பெண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்றும்,  மரபணுப் பரிசோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை என்றும் சுரேஷ் சாலே பலமுறை குற்றம்சாட்டியதாக பிரதி காவல்துறை மா அதிபரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரபணுப் பரிசோதனையை மீண்டும் செய்ய வேண்டும் என்பதே சுரேஷ் சாலேவின் கருத்தாக இருந்தது.

அரச தலைவரின் அறிவுறுத்தல்களின் பேரிலேயே அவர் அந்தப் பணியை மேற்கொண்டார் என்று பிரதி காவல்துறை மா அதிபர் அளித்த வாக்குமூலத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

2026 மார்ச் 11ஆம் நாள் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையில் பிரதி காவல்துறை மா அதிபரின் இந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத்,தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த மனுமீதான பரிசீலனையை ஓகஸ்ட் 25ஆம் நாளுக்கு ஒத்திவைத்து நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *