சஹ்ரானைப் பாதுகாத்த இராணுவ, அரச புலனாய்வு அமைப்புகள் – நீதிமன்றில் குற்றச்சாட்டு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முன்கூட்டிய தகவல்களை இராணுவ மற்றும் அரச புலனாய்வு அமைப்புகளின் சில பிரிவுகள், ஏனைய பாதுகாப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளத் தவறியதாக, சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குனர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு, கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
தாக்குதல்களுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் குறித்த எச்சரிக்கைகள் பெறப்பட்ட போதிலும், இராணுவப் புலனாய்வுத்துறைக்குள் இருந்த தனிநபர்கள் வேண்டுமென்றே தகவல்களை மறைத்தார்களா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாக, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள முதலாவது இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவுக்குத் தகவல் வழங்கிய ஒரு புலனாய்வு மூலத்திடமிருந்து புலனாய்வாளர்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தகவல் அளிப்பவர் 2014-ஆம் ஆண்டு முதல் தீவிரவாதிகள் குறித்த தகவல்களை வழங்கி வந்துள்ளார்.
மேலும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முந்தைய நாட்களில், குண்டுவெடிப்புகளுக்கு முந்தைய நாள் விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை உட்பட, குறிப்பிட்ட தகவல்களை அவர் வழங்கியுள்ளார்.
இருப்பினும், அந்தத் தகவல்கள் மற்ற பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று திலீபு பீரிஸ் குற்றம்சாட்டினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடைபெறும் என்பது குறித்து இராணுவப் புலனாய்வுத்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்த போதிலும், அது வேண்டுமென்றே நடக்க அனுமதித்தது என்ற தகவல் வெளிவந்துள்ளது என்றும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இராணுவப் புலனாய்வுத்துறைக்குள், இருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமைப் பாதுகாக்க முயன்றதாகவும், அவர் மூலமாக, தாக்குதல்களுக்கு இறுதியாகப் பொறுப்பானவர்களைப் பாதுகாக்க முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
வவுணதீவில் முன்னதாக நடந்த ஒரு தாக்குதல் தொடர்பான விசாரணைகளையும் அரசுத் தரப்பு குறிப்பிட்டது.
ஏப்ரல் 12 ஆம் நாள் கிரித்தலே புலனாய்வு முகாமில் இருந்த ஒரு அதிகாரியால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் எழுத்துப்பூர்வத் தகவல், சஹ்ரானையே குற்றவாளி என்று அடையாளம் காட்டியிருந்த போதிலும், இராணுவ புலனாய்வுத்துறை ஆரம்பத்தில் அந்தத் தாக்குதலுக்கு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரையே காரணம் காட்டியதாக திலீப பீரிஸ் கூறினார்.
அத்தகைய தகவல்களை வைத்திருந்தவர்கள் சாலேயுடன் தொடர்புடைய அதிகாரிகள் என்று பீரிஸ் குற்றம்சாட்டினார்.
தாக்குதல் நடத்தியவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு அரசியல் மற்றும் தளபாட ஆதரவு வழங்கப்பட்டதா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அலாவ்தீன் என அடையாளம் காணப்பட்ட மன்னார் தொழிலதிபர் ஆகியோரையும் அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
ஷங்ரி-லா குண்டுவெடிப்பாளர் இன்ஷாப் அகமட்டின் மாமனார் அலாவ்தீன் என்றும், தாக்குதல்களுக்கு முன்னர் இந்தியாவுக்குப் பயணம் செய்ய அந்தத் தொழிலதிபருக்குச் சொந்தமான வேகப் படகுகளை சஹ்ரான் மற்றும் பிறர் பயன்படுத்தியதாகவும் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், இன்ஷாப் அகமட்டை மணந்திருந்த அலாவ்தீனின் மகள், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள், நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே உள்ளன, மேலும் இவை நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை.
தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்களைப் பாதுகாத்ததாகக் கூறப்படும் நபர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முன்னர் முறைப்பாடுகளை அளித்திருந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய புலனாய்வாளர்கள் திட்டமிட்டுள்ளதாக அரசுத் தரப்பு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புகளுக்கு முன்னர் அரச புலனாய்வு சேவைக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவல்களையும் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.
தாக்குதல்களுக்கு முன்னர் அப்போதைய அரச புலனாய்வு சேவை அதிகாரி ஆய்வாளர் ரஞ்சன் செனரத் பண்டார, அப்போதைய அரச புலனாய்வு சேவை இயக்குனர் நிலந்த ஜயவர்தனவுக்கு 94 தீவிரவாதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அனுப்பியதாக அவர் கூறினார்.
அந்தப் பட்டியலில், தற்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஹ்ரான், ரில்வான் மற்றும் பிற நபர்களும் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை நடத்துமாறு நிலந்த ஜயவர்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்றும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வு மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகிய இரண்டிற்கும் உள்ள குழுக்கள் தீவிரவாதிகளைப் பற்றி அறிந்திருந்தும், அந்தத் தகவலின் மீது போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கான அறிகுறிகளை இந்த விசாரணை வெளிப்படுத்தியுள்ளது என்று திலீப பீரிஸ் வாதிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பல நாட்களுக்குப் பின்னர், 2019 ஏப்ரல் 26, அன்று சாய்ந்தமருதுவில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது.
அந்த இடத்தில் இறந்த அனைவரும் கட்டாயம் இறந்திருக்க வேண்டுமா என்றும், தாக்குதல்கள் குறித்த தகவல்களை வழங்குவதிலிருந்து தனிநபர்களை உயிருடன் பிடிப்பதைத் தடுக்கும் வகையில் இராணுவ உறுப்பினர்கள் வேண்டுமென்றே செயற்பட்டனரா என்றும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாக திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சமர்ப்பிப்புகளின் போது பெயரிடப்பட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தும், அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்று நீதிவான் கேள்வி எழுப்பினார்.
கிரித்தலே முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்த ஒரு அதிகாரியைக் கைது செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் புலனாய்வாளர்கள் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து வருவதாகவும் திலீப பீரிஸ் பதிலளித்தார்.
இதற்கிடையில்,சுரேஷ் சாலே தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறித்து அரசுத் தரப்பு கவலை தெரிவித்தது.
ஜூன் 7 முதல் சாலே சுமார் 100 நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வருவதாகவும், இந்த நிலைமை விசாரணையைத் தடுக்கவும் மற்றவர்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம் இருந்து நீதிமன்றம் முன்னர் கோரிய மருத்துவ அறிக்கைகள் ஏன் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அந்த அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை என்று நீதிவான் கூறினார்.
சாலேவுக்காக முன்னிலையான அதிபர் சட்டவாளர் ஷவிந்திர பெர்னாண்டோ, ‘பி’ அறிக்கைகளில் உள்ள கூற்றுகளே சான்றுகள் அல்ல என்று வாதிட்டு, குற்றச்சாட்டுகள் குறித்த அரசுத் தரப்பின் விளக்கத்தை நிராகரித்தார்.
மேலும், தனது கட்சிக்காரரின் மருத்துவ நிலை குறித்த விமர்சனங்களையும் அவர் நிராகரித்ததோடு, உரிய நடைமுறையின் மூலம் தொடர்புடைய மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றம் பெற வேண்டும் என்றும் கோரினார்.
வாதங்களைத் தொடர்ந்து, சாலே தொடர்பான கோரப்பட்ட மருத்துவ அறிக்கைகளை வழங்கத் தவறியது குறித்து விளக்கமளிப்பதற்காக, அடுத்த நாளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு நீதிவான் அமரசேன அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த வழக்கு செப்ரெம்பர் 22ஆம் நாள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
