சவூதியின் மேற்குப் பகுதியில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகியுள்ள சூழ்நிலைகளை அடுத்து, அங்குள்ள சிறிலங்கா குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, ஜெட்டாவில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அவசரகால அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய எச்சரிக்கை அமைப்பு மூலம், தங்கள் அலைபேசிகளில் பெறப்படும் அவசரகால எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும், உடனடியாக ஜன்னல்களிலிருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்குள் செல்லுமாறும் துணைத் தூதரகம் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வெளியில் இருப்பவர்கள், திறந்தவெளிகள், ஜன்னல்கள், கண்ணாடி, மாடங்கள் மற்றும் மொட்டை மாடிகளைத் தவிர்த்து, அருகிலுள்ள பாதுகாப்பான கட்டடத்திற்குள் செல்லுமாறும் அல்லது உறுதியான சுவருக்குப் பின்னால் தஞ்சம் அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூட்டங்களையும் அபாயகரமான பகுதிகளையும் தவிர்க்குமாறும், குறிப்பாக சம்பவங்களைப் படம் எடுக்கவோ, படம்பிடிக்கவோ அல்லது பதிவு செய்யவோ கூடாது என்றும் அந்த அறிவுரை சிறிலங்கா குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
வாகனம் ஓட்டும் சிறிலங்கா குடிமக்கள் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி, பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அபாயம் நீங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு சிறிலங்கா துணைத் தூதரகம் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சிறிலங்கா குடிமக்கள் பீதியடையவோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பவோ கூடாது என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக, சம்பவங்களைப் படம் எடுப்பது, காணொளி எடுப்பது அல்லது பகிர்வது தொடர்பாக, பொருந்தக்கூடிய சவூதி சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா தூதரகம் மேலும் குடிமக்களுக்கு நினைவூட்டியது.
மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் உள்ள குடிமக்கள் அவசரகாலத் தேவைகளுக்கு **911** என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம், அதேசமயம் பிற பகுதிகளில் அவசரகாலத் தேவைகளுக்கு **998** என்ற எண் பயன்படுத்தப்படுகிறது.
தூதரகத்தின் அவசரகாலத் தொடர்பு எண் **056 098 6671** ஆகும். இதனை தற்போதுள்ள அவசரகாலச் சூழ்நிலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், வழக்கமான தூதரக அல்லது தொழிலாளர் தொடர்பான விடயங்களுக்கு அல்ல. என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
