புதிய அரசியலமைப்பை கொண்டு வர அரசாங்கம் முடிவு எதையும் எடுக்கவில்லை
புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதா இல்லையா என்பது குறித்தும், எந்தச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்பது குறித்தும் அரசாங்கமாக நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
சரியான நேரத்தில் அதை நாங்கள் வெளிப்படுத்துவோம். நாங்கள் என்ன செய்தாலும், அது மக்களின் நலனுக்காகவே செய்யப்படும்.
புதிய அரசியலமைப்பு குறித்து விவாதிப்பதற்காக, முந்தைய அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்புச் சபை 82 முறை கூடியுள்ளது.
அரசியலமைப்புச் சபை வழிநடத்தல் குழுவின் அறிக்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
மக்களின் ஒப்புதலுடன் எங்கள் பதவிக்காலத்திற்குள் ஒரு புதிய அரசியலமைப்பை எங்களால் நிறைவேற்ற முடியும்.
ஒரு புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான ஆணையை நாங்கள் பெற்றுள்ளோம். பொதுமக்களுக்கு வாய்ப்பளித்து, போதுமான காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
