மேலும்

காரைக்கால்- காங்கேசன்துறை இடையே புதிய கொள்கலன் சரக்குப் படகுச் சேவை

இந்தியாவின் காரைக்காலையும், சிறிலங்காவின் காங்கேசன்துறை  மற்றும் திருகோணமலையையும் இணைக்கும், புதிய கொள்கலன் சரக்குப் படகுச் சேவை, வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் கொழும்பைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து இந்த சேவைகளை வழங்கவுள்ளன.

இந்தச் சேவையானது முழு கொள்கலன் சுமை (FCL) மற்றும் பகுதி கொள்கலன் சுமை (LCL) போக்குவரத்தை, வாராந்த திட்டமிடப்பட்ட பயணங்கள், போட்டித்தன்மை வாய்ந்த சரக்குக் கட்டணங்கள் மற்றும் பாதுகாப்பான பொருட்களின் கையாளுதலுடன் வழங்கும்.

இதற்கு 2023-ல் கட்டப்பட்ட, 1,600 மெட்ரிக் தொன் மொத்த எடை கொண்ட 81 கொள்கலன்களை ஏற்றக் கூடிய,  எம்/வி பேபூர் சுல்தான் (M/V Beypore Sultan) என்ற கொள்கலன் படகு மூலம் மேற்கொள்ளப்படும்.

இந்தக் கப்பல் பாக்கு நீரிணையில்  ஏழு நாள்களும் சுழற்சி முறையில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்ரெம்பர் 1,ஆம் திகதி முதல் தொடங்கும் ஒரு தற்காலிக கப்பல் பயண அட்டவணையை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, காரைக்காலில் இருந்து வாரந்தோறும் கப்பல்கள் புறப்பட்டு, காங்கேசன்துறையை வந்து சேரும்.

மேலும், தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக, டிசம்பர் 2026 இறுதி வரை கூடுதல் பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

வணிக விதிமுறைகளின்படி, ஒரு கொள்கலனுக்கான சரக்குக் கட்டணம் 650 முதல் 675 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என்றும், முன்கூட்டியே பணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்கலன் சரக்கு நிலைய அனுமதி பாண்டிச்சேரி வழியாகக் கையாளப்படும், அதே நேரத்தில் முதல் மூன்று நாட்களுக்கான கொள்கலன் தாமதக் கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் தொடக்கத்திற்கு முன்னதாக, நிறுவனம் யாழ்ப்பாணத்தில் இறக்குமதியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்காக ஒரு விழிப்புணர்வு அமர்வை நடத்தியது. அதில், முன்மொழியப்பட்ட சேவை மற்றும் அதன் வணிக ஏற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

இந்த புதிய சரக்கு இணைப்பு, இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு தனித்துவமான கடல்வழி சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தை வழங்குவதன் மூலம், தென்னிந்தியாவுக்கும் வடக்கு மற்றும் கிழக்குக்கும் இடையிலான வர்த்தக இணைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *