உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள்
தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
இந்திய -சிறிலங்கா அரசுகளிடம், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் நாள் முதல், நல்லூர் ஆலய முன்றலில் நீராகாரமின்றி உண்ணாநோன்பிருந்த தியாகதீபம் திலீபன், 12வது நாளில்- செப்ரெம்பர் 26ஆம் நாள், காலை 10.48 மணியளவில் தன்னுயிரைத் தியாகம் செய்தார்.
தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு நாளான இன்று, காலை ஊரெழுவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து, உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி புறப்பட்டு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தை அடைந்தது.
இதையடுத்து, காலை 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபம் திலீபனின் உருவச் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது தியாக தீபம் திலீபன் நினைவாக தூக்குக்காவடி எடுத்து வந்து பற்றாளர் ஒருவர், அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இன்று தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.






