அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ‘நீதியின் ஓலம்’ பேரணி
செம்மணிப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து, முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் போராட்டம், இன்று பேரணியுடன் நிறைவடைந்துள்ளது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் செம்மணியில் கடந்த 14ஆம் நாள் தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட ‘நீதியின் ஓலம்’ போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10.30 மணியளவில், யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து ஆரம்பமான பேரணி, யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் வழியாக, கோவில் வீதியில் அமைந்துள்ள ஐ.நாவின் பணியகத்தைச் சென்றடைந்தது.
இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்துலக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டது.
இந்தப் பேரணியில் அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதகுருமார், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.








