திருகோணமலையில் தொடங்கியது சிறிலங்கா கடற்படையின் கூட்டுப் பயிற்சி
சிறிலங்கா கடற்படையின் திருகோணமலை கடற்படைப் பயிற்சி 2026 (TRINEX 26), கிழக்குப் பிராந்திய கடற்படை தளபதி றியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவின் தலைமையில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளது.
திருகோணமலையில் உள்ள டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் தொடங்கிய இந்தப் பயிற்சி, திருகோணமலை துறைமுகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் எதமிர்வரும் 25ஆம் நாள் வரை தொடர்ந்து நடைபெறும்.
சிறிலங்கா கடற்படையின் 4வது அதிவேக தாக்குதல் படைப்பிரிவு, சிறப்பு படகு படைப்பிரிவு, மரைன் படைப் பிரிவு மற்றும் சிறிலங்கா விமானப்படை ஆகியன இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
இந்தப் பயிற்சி, சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைக்கு இடையே கடல்சார் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒருங்கிணைப்பையும் செயற்பாட்டு தயார்நிலையையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் அனைத்துலக கடல்சார் பயிற்சிகளில் சிறிலங்கா கடற்படையின் பங்கேற்புக்குத் தேவையான அறிவையும் திறன்களையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி இடம்பெறுகிறது.
