எரிபொருள் விலைகள் நள்ளிரவில் கடுமையாக அதிகரிப்பு
அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகளை சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
2022/23 காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய விலைத் திருத்தமாகவும் இந்த விலை உயர்வு அமைந்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 317 ரூபாவில் இருந்து 398 ரூபாவாக, அதாவது 81 ரூபா உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 365 ரூபாவில் இருந்து 455 ரூபாவாக, அதாவது 90 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் லங்கா ஓட்டோ டீசலின் விலை 303 ரூபாவில் இருந்து 382 ரூபாவாக, அதாவது 79 ரூபா உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் லங்கா சூப்பர் டீசலின் விலை 353 ரூபாவில் இருந்து 443 ரூபாவாக அதாவது 90 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை 195 ரூபாவில் இருந்து 255 ரூபாவாக அதாவது 60 ரூபா உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடைசியாக மார்ச் 9 ஆம் நாள் திருத்தப்பட்ட போது, ஒக்டேன் 92 விலை லிட்டருக்கு 24 ரூபாவும், ஒக்டேன் 95 விலை லிட்டருக்கு 25 ரூபாவும், ஓட்டோ டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாவும், சூப்பர் டீசல் விலை லிட்டருக்கு 24 ரூபாவும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 13 ரூபாவும் உயர்த்தப்பட்டது.
அதேவேளை, வாகனங்களுக்கு வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டையும் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில், விலை திருத்தத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, அத்தியாவசியத் துறைகளுக்கும், குறிப்பிட்ட குழுக்களுக்கும் மானியங்கள் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தையில் சுமார் 43% பங்கைக் கட்டுப்படுத்தும் சினோபெக் மற்றும் ஆர்எம் பார்க் ஷெல் போன்ற வழங்குநர்கள் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து விலை உயர்வைக் கோரியிருந்தனர்.
சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கும், விவசாயம், மீன்பிடித்தல், விடுதித் துறை, தொழிற்சாலைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் போன்ற இலக்கு வைக்கப்பட்ட சமூகங்களுக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
விலை உயர்வுகள் சமூகத்தில் மிகவும் நலிவடைந்தவர்களைப் பாதிக்காமலும், அத்தியாவசிய சேவைகளைத் தடுக்காமலும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கு வைக்கப்பட்ட சமூகங்களுக்கான மானியத்திற்கு அனைத்துலக நாணய நிதியமும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஆதரவுத் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வு தொடர்பாக, மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை அனைத்துலக நாணய நிதியத்தின் குழு சிறிலங்காவுக்கு வருகை தரும்போது இந்த விடயம் குறித்து மேலும் கலந்துரையாடப்படும்.
அரசாங்கம் மானியங்களை வழங்கும் அதேவேளையில், எரிபொருள் விற்பனையாளர்கள் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி அல்லது பிற வரிகளில் எந்தக் குறைப்பும் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக, விலைகளை நிலையாக வைத்திருக்க அவர்களுக்கு வழங்கக்கூடிய வேறு ஏதேனும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
