3 கப்பல்களை நிறுத்த அனுமதி கோரிய ஈரான் – 3வது கப்பல் எங்கே?
அமெரிக்க நீர்மூழ்கியால் மூழ்கடிக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் டெனா உள்ளிட்ட மூன்று கப்பல்களை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு ஈரான் கோரிக்கை விடுத்ததாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களை நேரலையில் சந்தித்து விளக்கமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 9 முதல் 13 ஆம் நாள் வரை சிறிலங்காவின் துறைமுகத்திற்குள் நுழைய, மூன்று கடற்படை கப்பல்களுக்கு அனுமதி தருமாறு, பெப்ரவரி 26 ஆம் நாள், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் ஈரான் கோரியிருந்தது.
ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வருகை என்று கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், நாங்கள் ஆராய்ந்த போது, அந்த கப்பல்கள் சிறிலங்காவின் தேசிய எல்லைக்கு அருகில், ஆனால் வெளியே நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகியது.
ஒரு ஒத்துழைப்பு வருகை அப்படி நடக்காது; அதற்கு விரிவான முறையான நடைமுறைகள் தேவை. எனவே, நாங்கள் அதற்கான நடைமுறைகளைப் படித்துக் கொண்டிருந்தோம்.
சிறிலங்கா ஈரானின் கோரிக்கையை பரிசீலனை செய்து கொண்டிருந்தபோது, மார்ச் 4ஆம் நாள், ஐஆர்ஐஎஸ் டேனா மூழ்கடிக்கப்பட்டது.
எந்தவொரு சூழ்நிலையிலும், மோதலில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நாடும், மற்றொரு நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த வகையிலும், நாட்டின் நிலப்பகுதி, கடல்சார் பிராந்தியம் அல்லது வான்வெளியை ஒரு பக்கச்சார்பான முறையில் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதே சிறிலங்காவின் நிலைப்பாடு.
பெப்ரவரி 27ஆம் நாள் இரண்டாவது கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் (IRIS Bushehr) இல் இருந்த ஒரு மாலுமி காயமடைந்ததாக சிறிலங்காவுக்கு அறிவிக்கப்பட்டது.
மனிதாபிமான காரணங்களுக்காக அந்த மாலுமியையும் அவருடன் வந்த ஒரு அதிகாரியையும் கரைக்கு அழைத்து வருமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம்.
அதன்படி, எங்கள் கடற்படை மற்றும் விமானப்படை தலையிட்டு காயமடைந்த நபரையும், பராமரிப்பு அளித்த அதிகாரியையும் தரையிறக்கியது, மேலும் தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
மார்ச் 4 அல்லது 5 ஆம் நாள் எங்கள் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு, ஐஆர்ஐஎஸ் புஷேர், மார்ச் 04 ஆம் நாள் வெளிவிவகார அமைச்சிடம் அனுமதி கோரியது.
எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடினார்.
மேலதிகமாக, ஈரானிய தூதரகம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுடன் தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்டது.
அதன்பின்னர், அவர்களின் இயந்திரங்களில் ஒன்று சேதமடைந்துள்ளதாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில், நாங்கள் எவ்வாறு தொடர வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.
அனைத்துலக மரபுகள் மற்றும் ஈரான் ஒரு முக்கிய தரப்பினராக இருக்கும் போரின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கை அவசரமாகக் கையாளப்பட வேண்டிய விடயமல்ல.
பணியாளர்களை வெளியேற்றுவது மற்றும் கப்பல் நிறுத்தப்படும் இடம் தொடர்பாக எட்டப்பட்ட பொதுவான உடன்பாட்டின்படி, கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இருந்தாலும், கொழும்பு எங்கள் முக்கிய வணிக துறைமுகமாகும்.
அத்தகைய கப்பலை எங்கள் முக்கிய வணிக துறைமுகத்திற்குள் வைத்திருப்பது, எங்கள் கடல்சார் தொழிலை மோசமாக பாதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
எனவே, கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் கொண்டு வர வேண்டாம், மாறாக அதை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தோம்.
கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்தில் கப்பல் குழுவினரை கரைக்கு கொண்டு வர முடிவு செய்தோம்.
அதன்படி, எங்கள் கடற்படைக் கப்பல்களில் ஒன்று கப்பலை அணுகியுள்ளது, தற்போது மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.
208 பேரை கரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த குழுவில் 53 அதிகாரிகள், 84 பயிற்சி அதிகாரிகள், 48 மூத்த மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் உள்ளனர்.
அவர்களை கப்பலில் இருந்து எங்கள் கப்பல்களுக்கு மாற்றி கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
“இந்தக் குழுவை கரைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை முடித்த பின்னரே கப்பலை திருகோணமலைக்கு நகர்த்த முயற்சிப்போம்.
நாங்கள் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளோம். நாங்கள் எந்த அரசுக்கும் பக்கச்சார்பான முறையில் செயல்படவில்லை, எந்த அரசுக்கும் அடிபணியவும் இல்லை.என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மூன்றாவது கப்பல் தொடர்பாக அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
