ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்களை மீட்கக் கோரி கொழும்பில் போராட்டம்
ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து போரிடச் சென்ற தமது உறவுகளை மீட்க கோரி கொழும்பில் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
உக்ரைன் போர்க்களத்துக்கு அனுப்பப்படுவதற்காக, ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படைகளாக சேர்த்துக் கொள்ளப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த பலர், போர் முனையில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிடச் சென்ற தமது உறவினர்களின் நிலையை கண்டறியுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பு கோட்டே தொடருந்து நிலையத்துக்கு முன்பாக உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஷ்ய- உக்ரைன் போர்முனையில் ஆபத்தில் உள்ள தமது உறவுகளை காப்பாற்றுமாறு சிறிலங்கா அதிபரைக் கோரும் பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
ரஷ்ய இராணுவத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இணைந்து கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியிருந்த சிறிலங்கா அரசாங்கம் அவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை இன்னமும் எடுக்கவில்லை.