வெளிநாட்டு தீவிரவாத போராளிகளுக்கு எதிரான சட்டத்தை வரைய அனுமதி
வெளிநாட்டு தீவிரவாத போராளிகளுக்கு எதிரான சட்டத்தை வரைவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட 2178 இலக்க தீர்மானத்தின் அடிப்படையில், இந்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கவுள்ளது.
இதுதொடர்பான சட்டத்தை வரைவதற்கு, சட்ட வரைவாளர்களுக்கு அறிவுறுத்துவது தொடர்பான முன்மொழிவு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரால், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த முன்மொழிவுக்கு கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி, பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் போன்றவற்றுக்கு எதிராக, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளை செயற்படுத்த சிறிலங்கா அர்ப்பணிப்புடன் இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வெளிநாட்டு தீவிரவாத போராளிகளுக்கு எதிரான சட்டங்களை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் வகுக்க சிறிலங்கா திட்டமிட்டுள்ளது.