மேலும்

சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா வல்லுனர்கள் குழு கவலை

சிறிலங்காஇராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, ஐ.நா வல்லுநர்கள் குழு, கடுமையான கவலை தெரிவித்துள்ளது. அத்துடன், பாதுகாப்புத் துறையின் நீண்டகால சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறும், கடந்த கால மீறல்கள்  குறித்து விசாரிக்குமாறும் அந்தக் குழு சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஓகஸ்ட் 18ஆம் நாள் சிறிலங்கா இராணுவத்தின் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்துள்ளார்.

25 ஆண்டுகால உள்நாட்டுப் போரில், இவர் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுவதால், இவரது நியமனம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் உட்பட ஏராளமானோர் கவலைகளை எழுப்பினார்.

“இந்த வகையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நிலையில், சிறிலங்கா இராணுவத்தின் மிகஉயர்ந்த பதவியில் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமரியாதை செய்கின்ற, நாட்டில் தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்கின்ற ஒரு மோசமான அறிகுறியாகும்,

இது சிறிலங்காவின் அரசு நிறுவனங்கள் மீதான சமூகத்தின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்றும், உறுதியற்ற நிலைக்கும் தூண்டுவதாக உள்ளது” என்றும் ஐ.நா வல்லுனர்கள் தெரிவித்தனர்.

மே 2009 இல் முடிவடைந்த போரின் கடைசி கட்டங்களில் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா 58 வது பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

இதன்போது, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, ஐ.நா. அறிக்கைகள் அவரையும் அவரது படைகளையும் குற்றம்சாட்டியுள்ளன.

2012 ஆம் ஆண்டில், லெப்.ஜெனரல் சில்வா ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் குழுவில் இருந்து குற்றச்சாட்டுகள் காரணமாக நீக்கப்பட்டார்.

“லெப்.ஜெனரல் சில்வா மற்றும் அவரது பிரிவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இன்று வரை முறையாக விசாரிக்கப்படவில்லை” என்று ஐ.நா வல்லுனர்கள் தெரிவித்தனர்.

“சிறிலங்கா இவற்றையும் பிற குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க விரும்பவில்லை என்றால், அனைத்துலக சமூகம் உலகளாவிய அதிகார வரம்புக் கோட்பாடுகள் உட்பட, பொறுப்புணர்வை அடைவதற்கான பிற வழிகளை ஆராய வேண்டும்” என வலியுறுத்தியுள்ள ஐ.நா வல்லுநர்கள்,  குற்றங்கள் எங்கு செய்யப்பட்டன என்பதைப் பொருட்படுத்தாமல், வேறு எந்தவொரு நாட்டினதும் நீதிமன்றத்தில் போர்க்குற்றங்களை விசாரிக்க உதவும் செயல்முறையைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“மனித உரிமைகள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தின் கடுமையான மீறல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை இவ்வாறு நியமிப்பது புரிதலை மீறுவதாக உள்ளது.

மீறல்களுக்கு விசாரிக்கப்பட வேண்டிய ஒருவர்,  நிறுவனத்தின் தலைவராக வைக்கப்படுவார் என்பதையும், அவை மீண்டும் நிகழாமல் இருக்க சீர்திருத்தப்படுவதையும் புரிந்துகொள்வதை இது மீறுகிறது.

பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் உட்பட பொறுப்புக்கூறல் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதங்கள் போன்ற இடைக்கால நீதி நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்ட சிறிலங்கா, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதும், வன்முறை மீண்டும் வருவதைத் தடுப்பதும் அவசியம் என்பதை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.

அண்மைய நடவடிக்கைகள் ஒரு உண்மையான இடைக்கால நீதி செயல்முறைக்கு அர்ப்பணிப்பு இல்லாதது, அதற்கு மாறாக நோக்கம் கொண்டது என்றும் ஐ.நா வல்லுனர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா வல்லுனர்களான பபியன் சல்வியோலி, பேனாட் டுகாய்மி, டே உங் பய்க், ஹோரியா எஸ்சலாமி, லூசியானோ ஹசன், ஹென்றிகாஸ் மிகேவிசியஸ், அக்னஸ் கல்லமாட், நில்ஸ் மெல்சர் ஆகியோரின் இந்தகூட்டறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகமே வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *