மேலும்

சிறிலங்கா வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாத கால கட்டணமில்லா நுழைவிசைவு

48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு,கட்டணமில்லா வருகை நுழைவிசைவு வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தொடக்கம், இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி 48 நாடுகளைச் சேர்ந்த, சுற்றுலாப் பயணிகளுக்கு, ஓரு மாத காலத்துக்கு கட்டணமின்றி, நுழைவிசைவு வழங்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவின் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கிலேயே, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அல்லது வணிக நோக்கத்துக்காக வருவோர், கட்டணமில்லா நுழைவிசைவை இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பித்தோ,  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னரோ, பெற்றுக் கொள்ள முடியும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறினார்.

ஆறு மாதங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்றும், எதிர்பார்க்கப்பட்டளவுக்கு இந்த திட்டம், வெற்றியளிக்காவிட்டால், இடைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

48 நாடுகளுக்கான நுழைவிசைவுக் கட்டணங்களை ரத்துச் செய்துள்ளதன் மூலம், சிறிலங்கா அரசாங்கத்துக்கு 4.3 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாத கால நுழைவிசைவுக்கு சிறிலங்கா அரசாங்கம் 35 டொலர்களை கட்டணமாக அறவீடு செய்து வந்தது. ஆசிய நாட்டவர்களுக்கு இந்தக் கட்டணம் 20 டொலர்களாக இருந்தது.

அதேவேளை,  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்பும் 48 நாடுகளின் பயணிகள், நாட்டை வந்தடைய முன்னர், நுழைவிசைவை பெறத் தேவையில்லை என்று குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பாசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவிசைவு மேசைகளில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து 30 நாட்களுக்கான  கட்டணமில்லா நுழைவிசைவைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட காலம் தங்கியிருக்க விரும்புவோர் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்” என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *