மேலும்

திரிசங்கு நிலையில் புதிய அரசியல் கூட்டணி – ஐதேகவுக்குள் வெடித்தது பூசல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை அறிவிக்கும் நிகழ்வு-திட்டமிட்டபடி நாளை மறுநாள்  திங்கட்கிழமை நடக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி, ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் வரும் 05ஆம் நாள் உடன்பாட்டைச் செய்து கொள்ள ஐதேக திட்டமிட்டிருந்தது.

இந்த புதிய அரசியல் கூட்டணிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும், அதன் யாப்புக்கு அங்கீகாரம் அளிக்கவும் நேற்றுமுன்தினம் ஐதேக செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது

அதில், புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு வாக்கெடுப்பு மூலம் இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதும், கூட்டணியின் யாப்புக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் செயலராக ராஜித சேனாரத்னவின் பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார்.

அத்துடன், ராஜித சேனாரத்னவின் மகன் சத்துர சேனாரத்னவின்  வீட்டு முகவரியே தேசிய ஜனநாயக கூட்டணியின் முகவரியாகவும் கொடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு சஜித் பிரேமதாச ஆதரவு ஐதேக உறுப்பினர்களும், கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

ஐதேகவை சேர்ந்த ஒருவரே, கூட்டணியின் செயலராக இருக்க வேண்டும் என்றும், அதன் தலைமைத்துவ சபையில் ஐதேக உறுப்பினர்களுக்கு அதிக ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஐதேக தலைமையகமான சிறிகொத்தாவின் முகவரியே கூட்டணியின் முகவரியாக இருக்க வேண்டும் என்றும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் 3 மணித்தியாலங்கள் நடந்த செயற்குழுக் கூட்டம் முடிவு ஏதும் எடுக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், வரும் 5ஆம் நாள் புதிய அரசியல் கூட்டணியை அறிவிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று ஐதேக பொதுச்செயலர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

ஆனால், கூட்டணியின் யாப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஐதேக பிரமுகர்களால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதுவரை கூட்டணியை அறிவிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், புதிய அரசியல் கூட்டணியை அறிவிக்கும் நிகழ்வை ஒத்திவைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது, எனினும் இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அதேவேளை, ஐதேக தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரியவைக் களமிறக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

முன்னதாக, சஜித் பிரேமதாசவின் பெயரே அதிகளவில் முன்மொழியப்பட்டு வந்த போதும், தற்போதைய நிலையில் கரு ஜயசூரியவை களமிறக்கும் முடிவில் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாசவை போட்டியில் நிறுத்த கட்சியின் பல உயர்மட்டத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும்,  சஜித் பிரேமதாசவை அதிபர்  வேட்பாளராக நிறுத்தினால், அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சி மற்றும் கூட்டணியில் இருந்தும் விலகப் போவதாக, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளதாக   பிரதமர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் வேட்பாளர் விவகாரத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள பூசல்களால், அதன்  பங்காளிக் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால், நாளை மறுநாள் புதிய கூட்டணியை அறிவிக்கும் நிகழ்வு கேள்விக்குறியாக மாறியுள்ளது எனதும் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *