மேலும்

போர்க்குற்றவாளிகள் என யாரையும் தண்டிக்கமாட்டோம் – மகிந்த ராஜபக்ச

மீண்டும் ஆட்சியமைத்த பின்னர்,  எந்தக் காரணத்தைக் கொண்டும் போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில், எவரையும் தண்டிக்கமாட்டோம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பீர்களா என்று எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“போர் முடிவுக்கு வந்து ஒரு ஆண்டு முடிவதற்குள், 2010 ஜனவரி 26ஆம் நாள் நடந்த அதிபர்  தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கிய பொதுவேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கினார்கள்.  ஆனாலும், அவர் படுதோல்வியடைந்தார்.

போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதியை விரும்பிய தமிழர்கள், அந்தப் போரில் பங்கேற்று சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த சிறிலங்காப் படையினரை ஏன் வெறுக்கின்றார்கள்? அந்தப் போர் வீரர்களை ஏன் போர்க்குற்றவாளிகள் என்று அழைக்கின்றார்கள்?

தமிழர்களின் இந்த வெறுப்பு எதற்காக என்று இன்னமும் எமக்குப் புரியவில்லை. ஆனால், தமிழர்களை நாம் மனதார நேசிக்கிறோம்.

நாம் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியதும் அரசியல் தீர்வு உட்பட தமிழருக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம்.

சிறைச்சாலையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்போம்.

ஆனால், எந்தக் காரணம் கொண்டும் போர்க் குற்றவாளிகள் என்ற பெயரில் எவரையும் தண்டிக்கமாட்டோம். போரின்போது, படையினர் எவரும் போர்க்குற்றங்களைப் புரியவில்லை.

அவர்கள், அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றி, வடக்கு, கிழக்குக்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *