மேலும்

அமெரிக்க புலனாய்வாளர்கள் விசாரித்தது உண்மை – ஒப்புக்கொண்டார் ருவன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் அமெரிக்காவின் எவ்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதை,  சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஒப்புக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய ருவன் விஜேவர்த்தன,

‘அமெரிக்க புலனாய்வாளர்களுக்கு அரசாங்கம் உதவியதாக, விமல் வீரவன்ச குற்றம்சாட்டினார்.

எவ்வாறாயினும், பயங்கரவாதம்  உலகெங்கும் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் எல்லோரையும் நாங்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

நாங்கள் பிரித்தானியா, பிரான்ஸ் மாத்திரமன்றி ரஷ்யாவுடனும் கூட இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது,

அந்த அடிப்படையில் தான், சந்தேகநபர்களைச் சந்திக்க எவ்பிஐ அதிகாரிகள் வெலிசறை கடற்படை முகாமுக்குச் சென்றனர்.

அமெரிக்க விசாரணைகள் பற்றி தேவையற்ற ஒரு போலியான விம்பத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் முற்பட்டாலும், அவர்கள் தமது அதிபர் வேட்பாளராக அமெரிக்க குடிமகன் ஒருவரையே தெரிவு செய்ய முற்படுகின்றனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்தியது, சஹ்ரான் மற்றும் அவரது குழுவினரால் என்பது தெளிவாக தெரிந்துள்ளது. இதில் வெளிநாட்டவர்களின் தொடர்புகள் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது

ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறினாலும் கூட, அவர்கள் இந்த தாக்குதலை நேரடியாக நடத்தவில்லை. அவர்கள் சஹ்ரானை வழிநடத்தவும் இல்லை.

ஐஎஸ் அமைப்பின்  பயங்கரவாத கொள்கைக்கு இவர்கள் ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான் சஹரான் தாக்குதல் நடத்தியுள்ளார்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், மேலும் இரண்டு சம்பவங்களுக்கும் பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்துவதாக பயங்கரவாதிகள் சிலரது ஒளிப்பதிவு உரையாடல்களில் கேட்கக் கூடியதாக உள்ளது. ஆதாரங்களை வைத்தே நாம் இதனைக் கூறுகின்றோம்.” என்றும் அவர் கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *