மேலும்

காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்குள் என்கிறது அரசாங்கம்

Gintota-tensionகாலி மாவட்டத்தில் உள்ள ஜின்தோட்டவில், முஸ்லிம்களுக்கு எதிராக நேற்றிரவு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நேற்றிரவு மேலதிக காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, கலகம் அடக்கும் அணி, மற்றும் இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று காலை 9 மணிவரை ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சிறு கைகலப்பை, சிங்கள- முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான மோதலாக மாற்றுவதில் சில அரசியல் குழுக்கள் ஈடுபட்டுள்ளதை அறிவேன்.

இவர்களின் தவறான பரப்புரைகளுக்கு பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது.

இன உணர்வுகளை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில், போலியான காணொளிகளும், செய்திகளும் சில சக்திகளால் பகிரப்படுகின்றன.

இனவெறியைத் தூண்டும் பரப்புரையில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்களின், பதவிநிலை, அரசியல் நிலை என்பனவற்றைத் தாண்டி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலர் அரசியல் நலன்களை அடைவதற்காக வதந்திகளைப் பரப்புகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

Gintota-tension

அதேவேளை, நேற்றைய பதற்ற நிலைமைக்குக் காரணமான 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக,  காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா காவல்துறை பேச்சாளர், ருவான் குணசேகர,

“அடுத்தடுத்த சில சம்பவங்களே வன்முறைகளுக்கு இட்டுச் சென்றுள்ளன. முதல் சம்பவம், கடந்த 13ஆம் நாள், இடம்பெற்றது. முஸ்லிம் பெண் ஒருவரும், அவரது மகளும் சிங்களவர் ஒருவரின் உந்துருளி ஒன்றினால் மோதப்பட்டனர். மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பியதும், காவல்துறைக்கு வெளியே சமரசம் செய்யப்பட்டு, பெண்ணுக்கும், மகளுக்கு 25 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டது. அதையடுத்து உந்துருளி சாரதி காவல்துறை பிணையில் விடப்பட்டார்.

இதையடுத்து நேற்றுமுன்தினம், இந்த விபத்துக்குப் பழிவாங்கும் வகையில் ஒரு தாக்குதல் இடம்பெற்றது. எனினும், விபத்துடன் தொடர்புடைய எவரும் அந்த இடத்தில் இருக்கவில்லை. இந்தச் சம்பவத்தில் முஸ்லிம் ஒருவர் காயமடைந்தார்.

அதையடுத்து, சிங்களவர்களின் இரண்டு வீடுகள் தாக்கப்பட்டன. ஒரு சிங்களவர் காயமடைந்தார்.

தொடராக நிகழ்ந்து வந்த இந்த வன்முறைச் சம்பவங்கள், நேற்று அரசியல்வாதிகள், மதத்தலைவர்களின் உதவியுடன்  கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்றுமாலை மற்றொரு வன்முறைச் சம்பவம் வெடித்தது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜிந்தோட்டவில், ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக சமூக ஊடகங்களின் மூலம் தவறான தகவல்களைப் பகிர்ந்து, நிலைமையை மோசமாக்கும் நபர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, ஜின்தோட்ட பிரதேசத்தில், ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தணிக்கும் முயற்சிகளில் பொது பலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரரும், அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *