மேலும்

தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு அழுத்தம் – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு

Arjuna-Ranatungaசிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு தனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லங்கா ஐஓசி நிறுவனம் இறக்குமதி செய்த எரிபொருள் தரமற்றது என்று நிராகரிக்கப்பட்டதையடுத்து, அந்த நிறுவனம் நடத்தும், எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து, சிறிலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விற்பனை நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்டளவு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. எனினும், பெற்றொலிய கூட்டுத்தாபனத்திடமும் மட்டுப்படுத்தப்பட்டளவு கையிருப்பே உள்ளது. இதனால், பரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஒரு கப்பலில் எடுத்து வரப்பட்டு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நிராகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமாறு சில அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களால் தனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

“தரம் குறைந்த பெற்றோலுடன், திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் ஒன்று 16 நாட்களாக காத்திருக்கிறது. அதனை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு விற்பதற்கு வெளிப்படையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை விட, தரம்குறைந்த எரிபொருளை கொள்வனவு செய்து சந்தையில் விற்பதால் மோசமான நெருக்கடி ஏற்படும். எனவே பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது.”என்றும் அவர் கூறியுள்ளார்.

பெற்றோல் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளுக்காக அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

petrol shotage

‘வியாழக்கிழமை வரையில் விநியோகிப்பதற்குத் தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது. வதந்திகளால் தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 40 ஆயிரம் மெட்றிக் தொன் பெற்றோலுடன் கப்பல் ஒன்று நாளை கொழும்பு வரவுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டை, மதிக்கும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் செயற்படவில்லை.

அந்த நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கப்பல் பெற்றோல் தரமற்றது என்று நிராகரிக்கப்பட்ட பின்னர், ஒக்ரோபர் 31 அல்லது நொவம்பர் 1ஆம் நாள் மற்றொரு கப்பல் எரிபொருளை கொண்டு வருவதாக அளித்த வாக்குறுதியை லங்கா ஐஓசி நிறைவேற்றவில்லை.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு கப்பல் டீசலை வாங்கினால், உடனடியாக பெற்றோலை விநியோகிக்க லங்கா ஐஓசி நிறுவனம் இணங்கியது.  ஆனால் சிறிலங்கா எவருடைய தாளத்துக்கும் ஆடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தற்போதைய எரிபொருள் நெருக்கடி இந்தவார இறுதி வரை நீடிக்கும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *