மேலும்

நாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

Supreme Court2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவராக இருந்தார் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, ஏனைய குறைந்தது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

திரைநட்சத்திரமாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கீதா குமாரசிங்கவை நீக்கி, மே 3ஆம் நாள் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதியரசர்களின் அமர்வு, உறுதி செய்தது.

சுவிட்சர்லாந்தின் குடியுரிமையையும் கொண்டிருந்ததால், அவர் வேட்பாளராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று அறிவித்திருந்தது.

குமாரசிங்க தாம் சுவிஸ் குடியுரிமையைக் கொண்டிருந்ததார் என்றும், 2015 ஓகஸ்ட் தேர்தலுக்குப் பின்னர், தமது குடியுரிமையை நீக்குமாறு சுவிஸ் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஒப்புக்கொண்டார் என்றும், நீதியரசர் சிசிர டி ஆப்ரூ, 26 பக்கங்களில் இருந்த அந்த தீர்ப்பில், குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் அதிகாரிகளுக்கு கீதா குமாரசிங்க 2015 ஓகஸ்ட் 25ஆம் நாள் அனுப்பிய கடிதத்தைக் கருத்தில் கொண்டு, அவர், 25.8.2015 அன்று தமது சுவிஸ் குடியுரிமையை விட்டுக்கொடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டதாக முடிவுக்கு வர முடியும்.

இந்தக் கடிதத்தின் மூலம், கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட போது, சுவிஸ் மற்றும் சிறிலங்கா இரட்டை குடியுரிமையைக் கொண்டிருந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

அவர் ஒரு வேட்பாளராகத் தகுதியற்றவர் என்பதே மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் முடிவாக உள்ளது, இதன் அர்த்தம், அவரது பெயர், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்க முடியாது.

17.8.2015 அன்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவர் என்று நீதியரசர் டி ஆப்ரூ கூறியிருந்தார். அதனை ஏனைய நான்று நீதியரசர்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

கீதா குமாரசிங்கவை வேட்பாளராக நிற்கத் தகுதியற்றவர் என்ற தீர்ப்பு, அவரது பெயரை உள்ளடக்கிய காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒட்டுமொத்த வேட்பாளர் பட்டியலையுமே, மோசமான சூழ்நிலைக்குள் தள்ளுவதாக அமையும். geetha-kumarasinghe

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது, எதிர்ப்புகள் எழுப்பப்பட்டன. அரசியலமைப்புக்கு முரணாக, இரட்டைக்குடியுரிமை கொண்ட கீதா குமாரசிங்கவின் பெயரை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர் பட்டியலை நிராகரிக்க வேண்டும் என்று ஏனைய கட்சிகள் கோரியிருந்தன.

எனினும், தெரிவத்தாட்சி அதிகாரி, தெரிந்தோ தெரியாமலோ அந்தக் கோரிக்கைகளை நிராகரித்து, நீதிமன்றத்தின் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஜேவிபி, மற்றும் ஐதேகவினருக்குக் கூறியிருந்தார். அவர்கள் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

காலி மாவட்டத்துக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலை வேறு விதமாக அமைந்திருக்கும்.

பொருத்தமற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கீதா குமாரசிங்க நீக்கப்பட்ட பின்னர், அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தேர்தல் அதிகாரிகள் முன்னர் வாதிட்டிருந்தனர். எனினும், பல சட்ட நிபுணர்கள் அந்தக் கருத்தில் இருந்து வேறுபடுகிறார்கள்.

தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ வேட்பாளர் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படும் போது, ஏனைய வேட்பாளர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.

எனினும், ஆவணங்களை நிரப்பும் போது, தகுதியிழப்புச் செய்யப்படக் கூடாது. வேட்புமனுத் தாக்கலின் போது, வேட்பாளர் ஒருவர் தகுதியிழப்பு செய்யப்பட்டால்,  ஒட்டுமொத்த வேட்புமனுவையும் நிராகரிப்பதற்கு இட்டுச் செல்லும்.

நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 115 ஆவது பிரிவின்படி, வேட்புமனு தாக்கலின் போது, வேட்பாளர்களுக்கு விதிவிலக்கு கிடையாது.  நாடாளுமன்றத் தேர்தல்களில் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கூறப்பட்டுள்ளன.

115 ஆவது பிரிவின் படி, தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ, வேட்பாளர் ஒருவர் மரணமானாலோ, போட்டியில் இருந்து விலகினாலோ, தகுதியிழப்பு செய்யப்பட்டாலோ, தேர்தல் செல்லுபடியற்றதாகாது. கட்சியினது அல்லது குழுவினது வேட்புமனுவைப் பாதிக்காது.

எவ்வாறாயினும் இது,  சட்டபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு அடிப்படையிலானதேயாகும். எல்லா வேட்பாளர்களும், சிறிலங்கா குடிமக்களாக இருக்க வேண்டும், வேறு எந்த நாட்டிலும் குடியுரிமை கொண்டவர்களாக இருக்கக் கூடாது. அப்படியிருக்கும் போது, வேட்புமனுவை தகுதியிழப்பு செய்ய முடியாது.

எனவே, தேர்தல் ஆணையம், 115 ஆவது பிரிவை கவசமாக பயன்படுத்த முடியாது, என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

ஏனென்றால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் உள்ள ஏனைய வேட்பாளர்கள், 115 ஆவது பிரிவின் கீழ் நன்மையை அனுபவிப்பதற்கு, கீதா குமாரசிங்க சட்டபூர்வமான ஒரு வேட்பாளராக இருக்கவில்லை.

கீதா குமாரசிங்கவின் வேட்புமனுவை சரியான முறையில் சவாலுக்குட்படுத்திய போது, தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதியாகிய தெரிவத்தாட்சி அதிகாரி, தவறிழைத்து விட்டார். அதனால், காலி மாவட்ட வாக்காளர்களுக்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாட்டுக்குமே அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

115 ஆவது பிரிவு தொடர்பாக எந்தக் குறுகிய விளக்கமும், வெளிநாட்டவர்களை வேட்புமனுக்களில் உள்ளடக்கலாம், நீதிமன்றத்தில் சவாலுக்குபட்படுத்தி, கீதா குமாரசிங்கவைப் போல, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியேற்றும் வகையில் நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்கலாம் என்ற நிலைக்கு இட்டுச் செல்லும்.

குமாரசிங்க வழக்கை 115 ஆவது பிரிவின் கீழ் அணுகக் கூடாது என்றும், இரண்டு நீதிமன்ற முடிவுகளின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும்  சிறிலங்கா தேர்தல் கண்காணிப்பாளர்களும் வாதிட்டனர்.

ஒருவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவதால், மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளையும் பாதிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனு தகுதியிழப்புச் செய்யப்பட்டால், அந்தக் கட்சி ஆறு ஆசனங்களையும், தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றையும் கூட இழக்கும் சாத்தியம் உள்ளது.

எந்தவொரு முன்னுதாரணமும் இல்லை என்பதால், காலி மாவட்டத்துக்கு இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு கோரி, மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரலாம்.

அல்லது  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஆசனங்களை மீள் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்கலாம்.

அது நாடாளுமன்றத்தில் ஜேவிபிக்கு மேலும் சில ஆசனங்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடும்.

காலி மாவட்ட முடிவுகளின் எந்த மாற்றமும், தேசியப் பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.  அது, நாடாளுமன்றத்திலும் அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்கும்.

நாடாளுமன்றத்தில் ஐதேகவுக்கு 106 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்களும், ஜேவிபிக்கு 6 ஆசனங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 ஆசனங்களும், ஈபிடிபி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தலா 1 ஆசனமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழிமூலம்       – சண்டே ஒப்சேவர்
மொழியாக்கம் – கார்வண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *