வெள்ளியன்று கொழும்பு வரும் சீனப் போர்க்கப்பல் – அம்பாந்தோட்டைக்கும் செல்கிறது?
இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, சீனப் போர்க்கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன கடற்படையின் பாரிய போர்க்கப்பல் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில வாரங்களாகவே, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் போர்க்கப்பல்கள் அடுத்தடுத்து கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சீனப் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு வரவுள்ளது. இந்தப் போர்க்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் அடுத்த மாதம் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அதற்கு ஊக்கமளிக்கும் வகையில், சீனப் போர்க்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.