மேலும்

யாழ். படைகளின் தலைமையகத்துக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி இறுக்கமான உத்தரவு

Major General Mahesh Senanayakaயாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, எந்தவொரு சூழ்நிலையிலும் இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார்.

நேற்றுமுன்தினம் காலையில் அவர் பலாலிப் படைத் தளத்தில் மூத்த படை அதிகாரிகளுடனும், படையினருடனும் கலந்துரையாடினார். இதன்போது அவர், யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து இராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

குறிப்பாக, யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற சில துப்பாக்கிச் சூட்டு மற்றும் வாள்வெட்டு, தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவும், அதனை ஒட்டி எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

cm-mahesh senanayakeயாழ். குடாநாட்டுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று பிற்பகல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதிகாரபூர்வற்ற வகையில் -நட்பு ரீதியாக இந்தச் சந்திப்பு நடந்தது.

இதன்போது காணிகள் விடுவிப்பு குறித்து ஆராயப்பட்டதாகவும், கேப்பாப்புலவு காணிகள் விடுவிப்பு விடயத்தில் விரைவில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி கூறியதாகவும், வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, எடுக்கப்பட வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்றும் யாழ்ப்பாண படைகளின் தலைமையகத்துக்கு, சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாகவும், தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *