மேலும்

குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறாவிடின் குற்றவாளிகளாக ஓரம்கட்டப்படுவோம் – சிறிலங்கா அதிபர்

maithriபோர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறப் பின்னடித்தால், அனைத்துலகம் எம்மை ஒதுக்கி வைத்து விடும் என்பதுடன், குற்றவாளிகளாகவும் முத்திரையை குத்தி விடும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று, போரினால் பாதிக்கப்பட்ட, உடல்உறுப்புகளை இழந்த படையினர் மற்றும் உயிரிழந்த படையினரின் குடும்பத்தினருக்கு ‘விருசர’ என்ற சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்கா அதிபர்-

‘உலகில் அனைத்து நாடுகளிலும் அந்த நட்டு மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் ஐக்கியத்தையும் பலபடுத்துவதுவது அந்த நாட்டின் பாதுகாப்பு படையினரேயாகும்.

அவ்வாறான நிலையில் சில சந்தர்ப்பங்களில் உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் பாதுகாப்பு படையினர் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.

உலகில் பல நாடுகள் இன்றும் அவ்வாறான அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன. சிறிலங்காவும் அவ்வாறான அனைத்து அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்து வந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆக்கிரமிப்பு நாட்டில் பலமடைந்த போது, எமது படையினர் 25 ஆண்டுகளாக பல தியாகங்களை செய்து போரை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

maithri-vurusara

மூவின மக்களையும் பாதுகாத்து நாட்டை பலப்படுத்தும் மிகப்பெரிய போராட்டத்தை எமது இராணுவம் மேற்கொண்டுள்ளது.

இந்த நாட்டில் அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், சகல இனத்தையும் பாதுகாக்கவும் நாம் போராடியது மறந்துவிட முடியாது.

இன்று நாம் நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் கடந்த கால கசப்பான நினைவுகள் எம்மைவிட்டு நீங்கவில்லை. இன்று நவீனத்துவம் அதிகாரத்தை தக்கவைக்கும் ஒரு சாதகமாகவே கருதப்படுகிறது.

இந்த மூன்று பத்தாண்டுகால போர் நாட்டை முழுமையாக சீரழித்தது. அபிவிருத்தியை முழுமையாக வீழ்த்தியது, நாட்டில் மதங்களுக்கு இடையிலும், இனங்களுக்கு இடையிலும் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்தது.

எமது இராணுவம் பல பின்னடைவுகளை கண்டபோது இந்தியாவின் உதவியை கூட நாம் நாடினோம். ஆனால் அதிலும் எமக்கு நன்மை அளிக்கவில்லை.

மிக நீண்டகால போராட்டத்தில் பின்னர் எமது இராணுவத்தின் மூலமாக போரை முடிவுக்கு கொண்டுவந்தோம். அதில் இருந்து திரும்பிப் பார்க்கும்போது இழப்புகள் பல கண்முன்னே தெரிந்தது.

இந்த வெற்றியின் பின்னால் எமது இராணுவ வீரர்கள் செய்த தியாகம் எதையும் மறக்க முடியாது. அதேபோல் எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவத்தை கைவிடவும் முடியாது.

புதிய அரசு என்ற ரீதியில் புதிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். எமது பாதுகாப்பு படையினரின் பலத்தையும்,சலுகைகளையும் உறுதிப்படுத்தி அதன் மூலமாக தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

நாம் மீண்டும் நாட்டின் தேசிய பாதுகாப்பை சீரழிக்க இடமளிக்க முடியாது. அதேபோல் இந்த நாட்டில் யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் அந்த காரணங்களை கவனத்தில் கொண்டு மீண்டும் அவ்வாறான எந்த பாதிப்பும் வராத வகையில் செயற்பட வேண்டும்.

நல்லிணக்க செயற்பாடுகளை இன்று சிலர் கேலி செய்கின்றனர். சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். சிலர் இரத்தம் பற்றி கதைக்கின்றனர்.

யாராக இருந்தாலும் எந்த இனமாக,மதமாக இருந்தாலும் அனைவருக்கும் இருப்பது ஒரே இரத்தம்தான். இரத்தத்தில் மதமோ, இனமோ இல்லை. குறிப்பாக நாட்டில் போர் நடந்தால் அது ஏன் என்ற காரணத்தை கண்டறிந்து மீண்டும் போர் ஒன்று ஏற்படாது தடுப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

கல்லினாலும், மண்ணினாலும், இரும்புக்கம்பிககளினாலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. மூவின மக்களும் ஒன்றிணைந்து நாட்டின் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டியது அனைவரதும் கடமை. அதேபோல் அனைவரையும் ஒன்றிணைப்பது அரசாங்கத்தின் கடமை.

நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஏற்படுத்தும்போது அதை தடுக்க அனைத்து தரப்பிலும் இனவாதக் கருத்துகள் எழும். நாட்டை குழப்ப சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி நாட்டின் நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்.

எமக்கு எதிராக பல குற்றங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இராணுவத்தை தண்டிக்கப் போவதாகவும், புலனாய்வு பிரிவை காட்டிக்கொடுக்கப் போவதாகும், நாட்டை பிரிக்க போவதாகவும் அனைத்துலக தரப்பின் மூலமாக நாட்டின் சுயாதீன தன்மையை அழிக்கப் போவதாகவும் பல குற்றங்கள் முன்வைக்கின்றனர்.

ஆனால் நாட்டின் தலைவர் என்ற வகையில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கின்றேன்.

கடந்த கால ஆட்சியின் போதும் ஆட்சி மாற்றத்தின்போதும் அரசாங்கம் என்ற வகையில் அனைத்துலக தரப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது. நாடு என்ற ரீதியில் தனியாக வாழ முடியாது.

இன்றைய காலகட்டத்தில் அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்புடன் தான் முன்செல்ல வேண்டும். அதேபோல் நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் இன மத பேதம் இன்றி அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.

நாட்டுக்கு உள்ளும்அனைத்துலக மடத்திலும் கடந்த முன்னைய அரசாங்கத்திற்கும் எமக்கும் எதிராக எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது.

அவ்வாறு பதிலளிக்காது புறக்கணித்து செல்ல முடியாது. அவ்வாறு புறக்கணித்து சென்றால் அனைத்துலக மட்டத்தில் எம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

நாட்டினுள் எழுந்துள்ள குழப்பங்களை, மக்களின் கோரிக்கைகளை தீர்க்க முடியாது. எமது பாதுகாப்பு தரப்பின் மீது சுமத்தியுள்ள குற்றசாட்டுகளை பொய்யென நிருபிக்க முடியாது. ஐக்கிய நாடுகளின் அங்கீகாரத்தை எம்மால் பெறமுடியாது.

இந்த நாட்டில் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளது. அவை தொடர்பில் உண்மைகளை கண்டறியக் கோரி அழுத்தங்கள் எழுந்துள்ளது. அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தக்கோரி அழுத்தம் எழுந்துள்ளது.

ஆனால் இந்த விசாரணைகளின் மூலம் உண்மைகளை கண்டறிவது மட்டுமே அடிப்படை நோக்கமே தவிர, எந்த காரணம் கொண்டும் எமது இராணுவத்தை தண்டிப்பது நோக்கம் அல்ல.

பொதுமக்களுக்கு நாம் பொறுப்புக்கூறும் வகையில் தான் இந்த விசாரணையை செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாது நாம் பின்வாங்கினால் அனைத்துலகமும் நாட்டு மக்களும் எம்மை குற்றவாளிகளாக பார்க்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். அதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க முடியாது.

அனைத்துலக ஒத்துழைப்பை, அனைத்துலக உதவிகளை தட்டிக்கழிக்க முடியாது. இன்று எமக்கு எதிராக குரல் எழுப்புபவர்களின் கதைகளை கேட்டு ஐ.நா உறுப்புரிமையில் இருந்து வெளியேறவோ, அனைத்துலக மட்டத்தில் எமக்கு இருக்கும் ஒத்துழைப்பில் இருந்து நீக்கவோ எம்மால் முடியாது.

எனது பதவிக்காலம் முடியும் முன்னர் அனைத்துலக அழுத்தங்களில் இருந்து முழுமையாக இந்த நாட்டை விடுவித்து நாட்டில் நல்லிணக்கத்தை முழுமையாக பலப்படுத்தியே செல்வேன் என வாக்குறுதியளிக்கின்றேன்.

பழிவாங்கும் நோக்கத்தில் என்னால் செயற்பட முடியாது. உண்மையில் இந்த நாட்டில் ஏன் போர் இன்று ஏற்பட்டது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். அதை விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.

அதேபோல் இந்த நாட்டு மக்கள் எம்மை நம்பி எமக்கு மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அந்த பொறுப்புகளை சரியாக செய்ய வேண்டும்.

நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மிகவும் முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றும் பயணத்தில் விரைந்து பயணித்து செல்கின்றோம்.

எமக்கு எதிராக எழும் அச்சுறுத்தல்களை கண்டு நாம் அஞ்சப்போவதில்லை. நாம் அச்சத்தில் பின்வாங்கபொவதில்லை அவர் குறிப்பிட்டார்.

ஒரு கருத்து “குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறாவிடின் குற்றவாளிகளாக ஓரம்கட்டப்படுவோம் – சிறிலங்கா அதிபர்”

  1. மனோ says:

    மூவின மக்களையும் பாதுகாத்து நாட்டை பலப்படுத்தும் மிகப்பெரிய போராட்டத்தை எமது இராணுவம் மேற்கொண்டுள்ளது.

    இந்த நாட்டில் அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், சகல இனத்தையும் பாதுகாக்கவும் நாம் போராடியது மறந்துவிட முடியாது.

    இவ்வளவு புண்ணியம் செய்த உங்களை பொறுப்புக் கூறாவிட்டால் எவனால் ஓரம் கட்ட முடியும் ? பயப்பிடாதீங்க உங்க வழி கிளியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *